திருப்பதி :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
கொடிமரம் மூலவர், உற்சவருக்கு புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டது அதன்பிறகு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. கோவில் முழுவதும் வண்ண மலர்கள், பழவகைகள் கொண்டு அலங்காரம் செய்திருந்தனர்.
இதேபோல் கோவில் கோபுர விமானங்கள் மதில் சுவர்கள் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன. ஏழுமலையான் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
உள்ளூர் மற்றும் வெளியூர் வெளி மாநில பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக ஏராளமான வாகனங்களில் வந்தனர்.
இதனால் அலிபிரி சோதனை சாவடியில் வாகனங்கள் நீண்ட தூரம் காத்திருந்தன. இதேபோல் தரிசனத்திற்காக வந்தவர்கள் அங்குள்ள குடோன்களில் தங்க வைக்கப்பட்டு தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
தரிசனத்திற்காக நீண்ட நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு மற்றும் பால் வழங்கப்பட்டது.
யுகாதி ஆஸ்த்தானத்தால் கோவிலில் இன்று காலை கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ரத்து செய்யப்பட்டது.
நேற்று ஏழுமலையான் கோவிலில் 56,958 பேர் தரிசனம் செய்தனர். 26,029 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.35 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.