கடந்த மார்ச் 27-ல், 2022-ம் ஆண்டிற்கான 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற வில் ஸ்மித், தன் மனைவி குறித்து கேலி செய்து பேசிய நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார். இதற்காக அதே மேடையிலையே அவர் மன்னிப்பும் கேட்டிருந்தார். இதையடுத்து உலகம் முழுவதும் இது பேசுபொருளானது. ஆஸ்கர் அகாடமி, இந்த விவகாரம் தொடர்பாக ஸ்மித் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகச் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து வில் ஸ்மித், அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் மற்றும் சயின்சஸ் உறுப்பினர் பதவியில் இருந்து தான் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் அவர், “அகாடமி எடுக்கும் எந்தவொரு முடிவையும் அதன் விளைவுகளையும் ஏற்றுக்கொள்வேன். மாற்றத்திற்கு நேரம் எடுக்கும். வன்முறையை நான் ஒருபோதும் அனுமதிக்காமல் இருப்பதை உறுதிசெய்வதற்கான வேலையைச் செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன்” என்றும் கூறியுள்ளார்.
இது பற்றி விரிவாகப் பேசிய அவர், “அகாடமியின் ஒழுங்குமுறை விசாரணை அறிவிப்புக்கு நான் நேரடியாகப் பதிலளித்துள்ளேன். எனது நடத்தைக்கான அனைத்து விளைவுகளையும் நான் முழுமையாக ஏற்றுக்கொள்வேன். 94வது அகாடமி விருதுகள் வழங்கலில் எனது செயல் அதிர்ச்சியாகவும், வேதனையாகவும், மன்னிக்க முடியாததாகவும் இருந்தது. நான் காயப்படுத்தியவர்களின் பட்டியல் நீளமானது. அதில் கிறிஸ், அவரது குடும்பத்தினர், எனது அன்பான நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள், ஆஸ்கர் விழாவில் கலந்து கொண்டவர்கள் மற்றும் வீட்டிலிருந்து இந்த ஆஸ்கர் விழாவைப் பார்த்த உலகளாவிய பார்வையாளர்கள் எனப் பலர் உள்ளனர்.
ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் மற்றும் வெற்றிபெற்றவர்கள் அவர்களின் அசாதாரணமான பணிக்காக கொண்டாடப்படுவதையும் கொண்டாடுவதையும் நான் இழக்கச் செய்துவிட்டேன். நான் ஆஸ்கர் அகாடமியின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்துவிட்டேன். திரைப்படத்தில் படைப்பாற்றல் மற்றும் கலைத்திறனை அங்கீகரிக்க அகாடமி செய்யும் அசாத்தியப் பணி தொடர வேண்டும். எனவே அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் உறுப்பினர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன். வாரியம் பொருத்தமானதாகக் கருதும் எந்தவொரு முடிவையும் ஏற்றுக்கொள்வேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்குப் பதிலளித்த மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் மற்றும் சயின்சஸ் அகாடமியின் தலைவரான டேவிட் ரூபின், “வில் ஸ்மித்தின் உடனடி ராஜினாமாவை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஏப்ரல் 18 அன்று எங்களின் அடுத்தத் திட்டமிடப்பட்ட குழுக் கூட்டம் நடக்கவிருக்கிறது. அதற்கு முன்னதாகவே வில் ஸ்மித்துக்கு எதிரான எங்கள் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து கலந்து ஆலோசிப்போம்” என்று கூறினார்.