கோவை கொண்டயம் பாளையம் பகுதியில், தனியார் நீட் தேர்வு பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஹாஸ்டல் வசதி கொண்ட இந்த பயிற்சி மையத்தில், செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் தங்கிப் படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று உடல்நிலை சரியில்லை என்று சொல்லி மாணவி வகுப்புக்கு செல்லவில்லை. அதையடுத்து, மாலை அவருடன் படிக்கும் சக மாணவிகள் அறைக்கு வந்தபோது, அவர் தூக்கு மாட்டித் தற்கொலை செய்தது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்தவர்கள் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், பல்வேறு தகவல்கள் தெரியவந்திருக்கின்றன. மாணவி தங்கிப் படித்துவந்த அந்த பயிற்சி மையத்தில், மதுரையைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவரும் படித்து வந்துள்ளார்.
அப்போது அந்த மாணவிக்கும், மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரையும் பெற்றோர் கண்டித்துள்ளனர். மாணவி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
இதனால், மாணவன் வீட்டில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, அவரை மதுரைக்கே அழைத்து சென்றுவிட்டனர். பயிற்சி மையத்திலும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அங்குப் படிக்கும் மாணவர்கள் ஆண்டுக்கு ஓரிரு முறைதான் வீட்டுக்குச் செல்ல முடியுமாம்.
இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த மாணவி, நேற்று தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீஸ் விசராணை நடத்தப்பட்டு வருகிறது.