மறக்கமுடியாத மகேந்திரன்..

மறக்கமுடியாத மகேந்திரன்..
நெட்டிசன்:
மூத்தபத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
யக்கிய படங்கள் குறைந்த அளவே.. ஆனாலும் ஒவ்வொன்றும் காலத்தால் அழியா சிற்பங்கள்.
மிகைப்படுத்தல் சினிமாவை, இயல்பு காட்சிகளால், எளிமையான பாத்திரங்களால் மாற்றிப்போட்டு விளையாடிய அற்புதமான கலைஞன் இயக்குநர் மகேந்திரன்..
முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நண்டு ஜானி என விதவிதமான ரகங்கள். அதிலும் பூட்டாத பூட்டுக்கள் படம். பொன்னீலன் எழுதிய உறவுகள் என்ற சிறுகதையை திரையில் சொன்ன விதம் வித்தியாத்திலும் வித்தியாசமானவை..
உலகத்தில் மிகவும் சிக்கலான ஆண் பெண் உறவு எங்கே எப்போது உன்னதமடையும், உடைந்து தடம்மாறும் என்பதை அடிப்படையாகக்கொண்டு எழுதிய சிறுகதை என்று பொன்னீலன் தெரிவித்திருந்தார். அப்படிப்பட்ட கதைக்களத்தில் தேவையற்ற கற்பனைகளை பாத்திரங்கங்கள் மேல் கலக்கவிடாமல் உள்ளது உள்ளபடி என்பார்களே அப்படி எடுத்தார் மகேந்திரன்..
அடிதடி ஆக்சன் என மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராய் கொடி பறந்த நடிகர் ஜெகனை, தமிழ் சினிமாவில் அதுவும் தடம் மாறும் மனைவியால் அவதிப்படும் கணவனாய் உப்பிலி என்ற பாத்திரத்தில் நினைத்துப்பார்க்கவே முடியாத ஒன்று. திருமணமாகியும், கிராமத்தில் இளவட்டமாய் பெண்கள்மேல் பித்துப்பிடித்து அலையும் நாயகன். குழந்தை பாக்கியம் இல்லை. என்பதால் மனைவி எப்போதும் வேதனையில் துடிப்பார். அந்த வேதனையே குழந்தை வரத்திற்காக இன்னொருவன் மேல் ஈர்ப்பாகி தடம்மாறி ஓடிப்போய்விடுவாள். மனைவியின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவளை மீண்டும் அழைத்துவந்து வாழ முற்படுவான் கணவன். ஆனால் கிராம மக்களோ அவள் ஊருக்குள் திரும்பி வந்து வாழ ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். கடைசியில் மனைவிதான் முக்கியம் என்று அவளோடு நாயகனே ஊரைவிட்டு வெளியேறிவிடுவான். படத்தின் காட்சிகளை வர்ணிக்க இங்கே இடம் போதாது.
சாம்பிளுக்கு ஹாஜா செஃரீப் சிறுவன் பாத்திரம். குழந்தை பாக்கியம் இல்லாததால் தேடிப்பிடித்து, வளர்ப்பதற்காக ஏழெட்டு வயதுள்ள சிறுவன் காஜா ஷெரிப்பை வீட்டுக்கு கூட்டுகிட்டு வருவார் ஹீரோ ஜெயன். வீட்டில், கட்டிய மனைவி உள்ளிட்ட பெண்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இதையும் மீறி சிறுவனை வளர்க்க ஆரம்பிப்பார். ஆனால் சிறுவனோ, அந்த வீட்டில் உள்ள முப்பது வயது வேலைக்கார பெண்ணை திருட்டுத்தனமாக பார்க்க முற்படுவான். குளிக்கும்போது, கிணற்றில் நீர் அள்ளும்போது, பாத்திரம் துலக்கும்போது என அந்த பெண்ணின் முக்கிய இடங்களை ஜாடைமாடையா பார்ப்பதையே வேலையாககொண்டு திரிவான்.
சிறுவனாக இருந்தாலும் அவனின் திருட்டு பார்வையில் உடம்பு கூசவே, உஷராகும் வேலைக்கார பெண்.வீட்டு எஜமானியிடம் சொல்வாள்.
சின்ன பையனா இருந்துகிட்டு பெரிய மனுஷன் பண்ற சேஷ்டையெல்லாம் செய்துன்றது விஷயம் அவள் கணவனுக்கு போகும், மகனாக வளர்க்க கொண்டு வந்தால் இந்த நாய் பெரிய பொம்பளைங்களை பெண்டாளவே நினைக்குதேன்னு நொந்துபோய், உடனே சிறுவனை அடித்து துரத்திவிடுவார் ஹீரோ.
மலையாள சூப்பர்ஸ்டார் ஜெயனைபற்றி இங்கே குறிப்பிட்டு சொல்லியாகவேண்டும். 1970களில் அவர்தான் கேரள இளைஞர்களுக்கு ஸ்டைல் மன்னன். கப்பல் படை அதிகாரி வேலையை உதறிவிட்டு சினிமாவில் ஐக்கியமானவர். சண்டைக்காட்சிகளில் அப்படியொரு அசத்தல் ரகமாய் செயல்படுவார் அதுவே அவருக்கு 1980 ஆம் ஆண்டு எமனாக போய்விட்டது. சண்டைக்காட்சியின் ஒரு பகுதியாக ஹெலிகாப்டரில் சாகசம் செய்யவேண்டும். டூப்பே போடாமல், சென்னை சோழவரம் பகுதியில் நடித்தார். ஷாட் ஓக்கே என்றாலும், ‘இல்லை இன்னொரு முறை போகலாம்’ என்று ரீடேக் கேட்டு வாங்கி பறக்கும் ஹெலிகாப்டரில் தலைகீழாக தொங்கி சாகசம் செய்தார் ஜெயன்.
ஆனால் யாருமே எதிர்பார்க்காத நிலையில் அந்த துயரச் சம்பவம் நடந்தது. ஹெலிகாப்டரில் இருந்து திடீரென ஜெயன் தவறி கீழே விழ, அந்த கலைஞனின் உயிர் மேலே பறந்தது..
மறுபடியும் மகேந்திரன் சார் விஷயத்துக்கு வருவோம். இயக்குனர் மகேந்திரனை இப்போது நினைத்தாலும் நினைவுகள் அப்படியே பின்னோக்கி ஓடுகின்றன.
1960-களில்ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன் முத்துராமன் படங்களுக்கு கதை எழுதியவருக்கு ஒரு பெரிய பிரேக்கை தந்த படம் 1974-ல் நடிகர் திலகத்தின் தங்கப்பதக்கம் படம்தான். சினிமாவில் போலீஸ் நாயகன் என்றால் இன்றளவும் முதலில் ஞாபகத்திற்கு வரும் எஸ்.பி. சௌத்ரி துவம்சம் செய்த தங்கப்பதக்கம் படத்தின் கதையும் வசனமும் இவருடையது.
ரஜினி கமல் நடித்த ஆடு புலி ஆட்டம் படத்திற்கு மகேந்திரன் எழுதிய வசனங்கள், பிரமிப்பானவை. ‘’டேய் ‘கொள்ளை அடிப்பதைவிட குடும்பம் நடத்துறது ரொம்ப ஆபத்தான விஷயம். ” என்று கொள்ளையனாய் ரஜினி பேசும் டயலாக். இன்னும் காதில் ரீங்காரமிடுகிறது..
கதை, திரைக்தை, வசனகர்த்தா என சுழன்றவருக்கு,1978 ஆம் ஆண்டு முதல்முறையாக இயக்குநர் அவதாரம். ரஜினி என்ற கறுப்பு வைரத்தை முள்ளும் மலரும் படத்தில் காளி என்ற பாத்திரத்தில் காட்டிய விதம்…முள்ளும் மலரும்…அது ஒரு மேஜிக்..
பொதுவாக படங்களில் சில முக்கிய பாத்திரங்கள் தங்கள் நிலைப்பாடுகளை இடையிலேயோ, கடைசியிலேயோ மாற்றிக்கொள்ளும்..ஆனால் இங்குதான் முள்ளும் மலரும் வித்தியாசப்பட்டு போய் நிற்கும் விஞ்ச் ஆப்ரேட்டர் காளி என்கிற ரஜினிக்கு இஞ்சினியர் குமரன் என்கிற சரத்பாபுவை பிடிக்கவே பிடிக்காது .
காளி தங்கையான வள்ளி என்கிற ஷோபாவுக்கு இஞ்சினியர் குமரனை பிடிக்கும் ஆனால்.காளியின் சம்மதம் இல்லாமல் கல்யாணம் என்பதில் பிடிவாதமாக இருப்பார். குமரனோ, வள்ளியை மணந்தே தீருவதில் உறுதிபாய் இருப்பார். காளியின் வெறுப்புக்காக பயந்து வள்ளியைவிட்டு வேறு திசையில் போகமாட்டார். நல்ல எஞ்சினியர் மாப்பிள்ளையை வெறுக்கும் கணவன் போக்கு பிடிக்காத காளியின் மனைவி மங்கா, தன் வாழ்க்கையே பறிபோனாலும் பரவாயில்லை என வள்ளியையும் குமரனையும் சேர்த்து வைப்பதில்தான் திடமாய் இருப்பார்..
கிளைமாக்சில், வள்ளியை குமரன் கரம் பிடிப்பார். உற்று நோக்கினால், நான்கு பாத்திரங்களும் கடைசி வரை தங்களை மாற்றிக்கொள்ளவே கொள்ளாது. கணவன் பிடிவாதத்திற்கு அஞ்சி மங்கா, முன்வைத்த காலை பின்வைக்க மாட்டார்.. அண்ணனை மீறி தங்கை காதலினிடம் மாங்கல்யம் பெற மாட்டார்.. ஒருகட்டத்தில் தங்கையின் திருமணத்திற்கு காளி சம்மதம் தெரிவித்தாலும் அதன்பிறகும் மாப்பிள்ளை குமரனை தனக்கு பிடிக்கவில்லை என்றுதான் சொல்வார்.
“இப்பவும் சொல்றேன், எனக்கு உங்களை பிடிக்கலை சார்.. ஆனா என் தங்கச்சிக்க உங்கள பிடிக்குது சார்” என ஒற்றைக்கையுடன் வாழும் அந்த காளி பாத்திர சொல்ல, படம் முடியும்..
படத்தில் எல்லோரையும்விட வெற்றிபெறுவது, தங்கை மீது அண்ணன் வைத்திருக்கும் நம்பிக்கை தான். அந்த நம்பிக்கையை இன்னும் வலுவாக்கி திருப்பி கொடுத்தே, தான் விரும்பியதை பெற்று செல்வாள் தங்கை..
உதிரிப்பூக்கள், நண்டு, நெஞ்சத்தைக் கிள்ளாதே ஜானி, மெட்டி என மகேந்திரன் இயக்கிய படங்களை அங்குலம் அங்குலமாக விவரித்து எழுத வேண்டும் என்று ஆசை..
மக்கள் திலகம் எம்ஜிஆரின் வற்புறுத்தலால் சினிமா உலகின் மீது கவனத்தை பதித்த மகேந்திரன், எம்ஜிஆருடன் தன்னால் தன்னிச்சையாக தனக்கான திரை மொழியில் பயணிக்கமுடியாது என்று நினைத்து கடைசிவரை விலகியே இருந்தார்.
எம்ஜிஆருக்காக பொன்னியின் செல்வன் நாவலை திரைக்கதை வடிவமாக்கும் மகேந்திரனின் முயற்சி கைகூடியிருந்தால் இந்த நிலைமை மாறியிருக்கும்.
மகேந்திரன் சாரின் ஒவ்வொரு பிறந்தநாளன்று காலையும் போன் செய்வோம், வாழ்த்து சொல்லுவோம்.. எப்பேர்பட்ட ஜாம்பவான் அவர்! ஆனால் எந்த ஈகோவும் இல்லாமல் உற்சாகமாக சிறிதுநேரமாவது உரையாடுவார்.
நினைக்க நினைக்க எவ்வளவு சுவாரசியமான சம்பவங்கள்.
மகேந்திரன் என்ற அந்த மாமனிதர் இப்போது நம்முடன் இல்லை அவரின் படைப்புகளால் என்றென்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
இயக்குனர் மகேந்திரன் அவர்களின் மூன்றாவது நினைவு தினம் இன்று..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.