மன்மத லீலை விமர்சனம்: குடும்பப்பாங்கான ஒரு அடல்ட் சினிமா! வெங்கட் பிரபுவின் பரிசோதனை முயற்சி எப்படி?

ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் இரண்டு ‘ஒன் நைட் ஸ்டாண்டு’களுக்கான முன்வினை பின்வினை பற்றிப் பேசுகிறது ‘மன்மத லீலை’.

2020-ல் ஃபேஷன் துறையில் சத்யா கொடி கட்டிப் பறந்தாலும், 2010ல் அவர் தாடி மீசை எதுவுமில்லாத அப்பாவி காலேஜ் மாணவன். ஆனாலும் இரண்டு காலகட்டத்திலும் பெண்கள் விஷயத்தில் அவருக்குக் கொஞ்சம் சபலம் உண்டு. விவரமாகக் காய் நகர்த்திக் காரியம் சாதிப்பதில் கில்லாடி.

Manmadha Leelai

2010ல் நடக்கும் கதையில் தான் இணைய வழியில் சந்திக்கும் பூர்ணியை, அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சந்திக்கச் செல்கிறார். நிகழ்காலத்திலோ மனைவி அனுவும், மகளும் சொல்லிவைத்தாற் போல வெளியே சென்றுவிட, வீட்டுக் கதவை தட்டிக்கொண்டு உள்ளே வருகிறது ஒரு வாய்ப்பு. தானாகச் செல்லும் போதும், தன் வலையில் தானாக விழும் போதும் சத்யா என்ன செய்கிறார், இந்தச் சம்பவங்களால் சத்யாவுக்கு என்ன சம்பவம் நடக்கிறது என்பதுதான் ‘மன்மத லீலை’ படத்தின் கதை.

சத்யாவாக அசோக்செல்வன். இரண்டு காலநிலைகளுக்கு ஏற்ப இரண்டு கெட்டப்கள். ஆனால், அதையும் மீறி சின்ன சின்ன எக்ஸ்பிரசன்களில் கலாட்டா செய்திருக்கிறார். மாட்டிக்கொண்டு கண் விழி பிதுங்கி நிற்கும் தருணங்களில் அவரின் ரியாக்‌ஷன்களுக்குப் பக்கபலமாக செவிகளுக்கு சிரிப்பு மூட்டுகிறது பிரேம்ஜியின் பின்னணி இசை. டெம்போவான இசை ஒரு பாதி கதைக்கு என்றால் இன்னொரு பக்கம் நாதஸ்வரம், கொட்டு மேளம் என ரகளையாக இறங்கி அடித்திருக்கிறார் பிரேம்ஜி.

மன்மத லீலை

வெங்கட் பிரபுவின் பட்டறையிலிருந்து இந்தப் படத்துக்கு அரவிந்த் ஆகாஷ், வைபவ், பிரேம்ஜி மட்டுமே நடிப்பில் தலைகாட்டுகிறார்கள். ‘மாநாடு’ படத்திலிருந்து கருணாகரனும் கம்பெடி ஆர்ட்டிஸ்ட் ஆகிவிட்டபடியால், அவரும் படத்தில் வருகிறார். சம்யுக்தா, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட் என மூன்று நாயகிகள். அடல்ட் காமெடி படத்தில் அடல்ட் காட்சிகளைவிட ஸ்மிருதி வெங்கட் ஏற்றிருந்த எமோஷனல் காதல் காட்சிகள் சிறப்பாக இருந்தன எனச் சொல்லும் அளவுக்கு பிற காட்சிகள் இருந்தன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

அடல்ட் காமெடி என்றதுமே கடைசி காட்சியில் ஹீரோ மனம் மாறி திருந்துவது என்றெல்லாம் இல்லாமல் ஜாலியான டெரர் ட்விஸ்டுடன் இந்தக் கதையை எழுதியிருக்கிறார் மணிவண்ணன். தன் உதவி இயக்குநரின் கதைக்குத் திரை வடிவம் கொடுத்து இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. வசனங்களையும் இருவரும் இணைந்தே எழுதியிருக்கின்றனர். இரண்டு மணி நேரத்தில் இரண்டு கால கட்டங்களை முன்னுப் பின்னாக எந்தக் குழப்புமில்லாமல் இல்லாமல் சொல்கிறது வெங்கட் ராஜனின் படத்தொகுப்பு.

மன்மத லீலை

அடல்ட் படம் என்றாலே வழிந்தோடும் இரட்டை அர்த்த வசனங்கள், பாலியல் தூண்டும் காட்சிகள் என்பதெல்லாம் இல்லாமல் ரொம்பவும் சாத்வீகமாகவே படத்தை எடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு. படத்தின் பலம், பலவீனம் இரண்டும் அதுதான். அடல்ட் காமெடி படங்களில் இருக்கும் வசன சுவாரஸ்யம் எதுவும் இல்லாமலே இரண்டு பிரச்னைகளின் நீட்சியாக மட்டுமே படம் நகர்கிறது. அதனாலேயே, இதென்னடா குடும்பப் பாங்கான அடல்ட் திரைப்படம் போல என்று சொல்ல வைத்துவிடுகிறது. ஆனால், முத்தக் காட்சிகள் இருக்கின்றன என்பதையும் பேமிலி ஆடியன்சுக்காக சொல்ல வேண்டியதிருக்கிறது. மிகக் குறைவான நடிகர்களுடன் எடுக்கப்பட்டிருப்பால், கொரோனா காலகட்டத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் போல எனத் தோன்ற வைத்துவிடுகிறது.

அடல்ட் காமெடி படத்துடன் கூடிய வெங்கட் பிரபு ஸ்பெஷல் ட்விஸ்டுக்கு ‘மன்மத லீலை’யை அணுகலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.