வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மேலும் “உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும், உள் இட ஒதுக்கீடு வழங்கும்போது, அதற்கான சரியான, நியாயமான காரணங்களை அரசு கொடுக்க வேண்டும்” என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில், தமிழக அரசுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “தமிழக முதல்வர் தம்பி மு.க.ஸ்டாலின் வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை பெற்று தருவார். அவர் நினைத்தால் ஒரே வாரத்தில் பெற்றுத் தர முடியும். இரண்டு வாரங்கள் கூட எடுத்துக் கொள்ளட்டும். ஸ்டாலின் இதைச் செய்து கொடுப்பார் என்று ஒட்டு மொத்த வன்னியர் சமுதாயமும் எதிர்பார்க்கிறது. வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்காக எந்த போராட்டமும் நடத்தப் போவதில்லை. முதல்வர் விரைவில் செய்து முடிப்பார். வரும் நாள்களில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்க இருக்கிறது. ஆனால் இதற்கான சிறப்பான நாளை உருவாக்கி வன்னியருக்கான இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தர வேண்டும்” என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய பா.ம.க இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், “உச்ச நீதிமன்றம் வன்னியர்களின் பின்தங்கிய நிலை குறித்து புள்ளிவிவரம் கேட்கிறது. இது வன்னியர்களுக்கான பிரச்னை கிடையாது. சமூக நீதிக்கான பிரச்னை. இதை முதல்வர் செய்து கொடுப்பார்” என்றார்.