டெல்லி: சொத்து வரியை உயர்த்தினால்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி தரப்படும் என ஒன்றிய அரசு கூறியது என அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள, குடியிருப்பு, வணிக, கல்வி பயன்பாடு கட்டடங்களுக்கான சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச்சந்தித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு; தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு நியமித்த 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை உயர்த்த வேண்டும் எனவும், அதன் பெயரிலேயே ஒன்றிய அரசின் மானியங்கள் விடுவிக்கப்படவேண்டும் எனவும் தெரிவித்தது. அதன் அடிப்படையில், சென்னை மாநகரத்தை பொறுத்த அளவில், 24 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் இந்த வரி உயர்வு ஏற்பட்டிருக்கிறது. மற்ற பகுதிகளிலே 14 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வரி உயர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சொத்து வரி எப்படியென்றால், சந்தை மதிப்பு, பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்ற காரணங்களை பரிசீலித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான நகராட்சி மற்றும் பேரூராட்சி, உள்ளாட்சி போன்ற அமைப்புகளில் சொத்து வருவாய் பெருமளவில் குறைந்துள்ளது. ஆனால் செலவினம் பலமடங்கு உயர்ந்துள்ளது. எப்படி குறைந்திருக்கிறது என்று நான் உங்களுக்கு சொல்கிறேன். 2010-11ல் சென்னை மாநகராட்சியுடைய சொத்து வருவாய் என்பது 60 விழுக்காடாக இருந்தது. 2015-16ல் 51 விழுக்காடாகக் குறைந்தது. இப்போது 2020-21ல், 43 விழுக்காடாகச் சொத்து வருவாய் குறைந்து இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்த அளவில், அதிகமான நகர்ப்புற பகுதி இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். எனவே நகர்ப்புறத்தில் பெருகிவரும் மக்கள்தொகையின் அடிப்படையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுப்பதற்கும், புதிய மேம்பாலங்கள், நவீன பள்ளிக்கூடங்கள், பூங்காக்கள் போன்ற வசதிகளை செய்து தருவதற்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தங்களுடைய சொந்த வருவாயை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்தச் சொத்து வரி உயர்வு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில், மிகவும் கவனமாக முதலமைச்சர் அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். இதுதான் தற்போதைய உண்மை நிலை. நீங்கள் பார்த்தீர்களேயானால், சென்னை மாநகராட்சியில், 600 சதுர அடி பரப்புள்ள குடியிருப்புக் கட்டடத்திற்கு தற்போது விதிக்கப்படும் அதிகபட்ச சொத்துவரி 3,240 ரூபாய் ஆகும். சீராய்வுக்குப் பிறகு இது 4,860 ரூபாயாக உயரும். ஆனால் இதே பரப்பளவு கொண்ட குடியிருப்புக் கட்டடத்திற்கு பெங்களூரில் 8,660 ரூபாயும், கொல்கத்தாவில் 15,984 ரூபாயும், பூனாவில் 17,112 ரூபாயும், மும்பையில் 84,583 ரூபாய் என்றும் மாநகராட்சியைப் பொறுத்த அளவு உயர்ந்து இருக்கிறது. ஆனால், மகாராஷ்டிராவில் 84,000-மும், நமக்கு 5,000 என்ற அளவிலேதான் இன்றைக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உயர்த்தியிருக்கிறார்கள். உயர்த்த உத்தரவு தந்திருக்கிறார்கள். இந்த உயர்வு நகராட்சித் துறையின் சார்பாக செய்யப்பட்டிருக்கிறது. பெருநகரங்களில் தவிர்த்து, மற்ற நகரங்களில் உயர்வை எடுத்துக்கொண்டால், உதாரணத்திற்கு 600 சதுரடி பரப்பளவுள்ள குடியிருப்புக் கட்டடத்திற்கு தற்போது விதிக்கப்படும் குறைந்தபட்ச சொத்துவரி 204 ரூபாய் ஆகும். சீராய்வுக்குப் பிறகு இது 255 ரூபாயாக உயரும். ஆனால் இதே பரப்பளவு கொண்ட குடியிருப்புக் கட்டடத்திற்கு லக்னோவில் 648 ரூபாய், இந்தூரில் 1324 ரூபாய், ஆமதாபாத்தில் 2103 ரூபாய் என்ற அளவிலே உயர்ந்திருக்கிறது. கோயம்புத்தூரில் 600 சதுர அடி பரப்புள்ள குடியிருப்புக் கட்டடத்திற்கு தற்போது விதிக்கப்படும் அதிகபட்ச சொத்துவரி 972 ரூபாய் ஆகும். சீராய்வுக்குப் பிறகு இது 1,215 ரூபாயாக உயரும். ஆனால் இதே பரப்பளவு கொண்ட குடியிருப்புக் கட்டடத்துக்கு லக்னோவில் 2,160 ரூபாய். ஆகவே, மற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டை விட 50%, 100%-க்கும் மேலாக வரி இருக்கிறது. நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இதில் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்படாத அளவிற்கு இந்த வரி உயர்வை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அதுவும் இப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற நகராட்சியில் வந்திருக்கிற தலைவர்கள் தன்னுடைய நகராட்சிப் பணத்திலேயே, நகரத்தை முன்னேற்றுவதற்காக வழிவகை செய்வதற்காக இந்தப் பணி செய்யப்பட்டு இருக்கிறது. இதை மற்றவர்கள் அதிகமாக விமர்சனம் செய்கிறார்கள். அதுவும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொல்கிறார், ‘இது அவர்களுக்கு ஓட்டு போட்டதற்கு உங்களுக்குப் பரிசு’ என்று சொல்கிறார். இந்த வரி உயர்வை 2018-ஆம் ஆண்டு அவர்கள் இரண்டு மடங்காக உயர்த்தியிருந்தார்கள். தேர்தல் வருகின்ற காரணத்தால், முழுமையாக அதை நிறுத்தி வைத்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு அதை உயர்த்துவதாக அன்றைக்கு நிறுத்தியவர்கள்தான் அவர்கள். ஆனால், அவர்கள் என்ன செய்தார்கள் என்றால், ஏழை, பணக்காரர் என்று இல்லாமல், ஒரே வகையில் எல்லாருக்கும் ஒரே முறையில் வரி உயர்வு தரப்பட்டது. நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஏழைகளுக்குக் குறைவாகவும் கொஞ்சம் வசதி படைத்தோர் – 1800 சதுர அடிக்கு மேல் இருக்கக்கூடிய கட்டடங்களுக்கு வரியைக் கூடுதலாக உயர்த்தியிருக்கிறார்கள். இதுதான் உண்மை நிலை.கேள்வி : கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா ஊரடங்கால் நிறைய ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், எல்லோருமே தொழிலில் பாதிக்கப்பட்டிருந்தார்கள், வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு சமமாக இல்லாமல், அதிகமாக இடம் உள்ளவர்களுக்கு அதிகமாகவும், குறைவாக உள்ளவர்களுக்கு குறைவாக வரி போடுவதில் எந்தவிதத்தில் நியாயமாக உள்ளது? எப்படி நீங்கள் கணக்கிட்டீர்கள்?பதில்: 600 சதுர அடி என்பது சென்னையில் இருக்கிற கிட்டத்தட்ட 54 இலட்சம் பேரில் முக்காவசி பேர் 600 சதுர அடிக்கு குறைவாக இருக்கிறது. அவர்களுக்கு 100 ரூபாய் என்றால் 125 ரூபாய் வரி குறைந்த அளவுக்கு இருக்கும். 1800 சதுர அடிக்கு மேல் இருக்கிறவர்களுக்கு 50% வரி உயர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதே போல 1800 சதுர அடிக்கு மேல் கடைவீதியில் இருக்கிறவர்கள் முக்கியமாக வீதிகளில் இருக்கிறவர்களுக்கு 100 சதவீதமாக உயர்வு தரப்பட்டிருக்கிறது. Slab system-த்தில்தான் இந்த உயர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிக மிகக் குறைவாக தமிழ்நாட்டில் இருக்கிறது. கேள்வி: பெட்ரோல், டீசல் விலை ஏறியிருக்கிறது. எரிவாயு விலை ஏறியிருக்கிறது. இந்த சமயத்தில் இந்த விலை உயர்வு தவிர்த்திருக்கலாம் அப்படி ஒரு பேச்சு இருக்கிறது. தவிர்த்திருக்க முடியுமா? இல்லை, என்ன கட்டாயம்?பதில்: இதை ஏற்றுவதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை. 15வது நிதி ஆணையம் இதை ஏற்றினால்தான் உங்களுக்குப் பணம் விடுவிப்போம் என்று ஒன்றிய அரசு கொடுத்த ஒரு கட்டளையால்தான் இது ஏற்றப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டே 7000 கோடி ரூபாய்க்கு மேலாக வருவாயைத் தேர்தல் முடிந்த பிறகு தருகிறோம் என்று சொன்னார்கள். இப்போது இந்த 15-வது நிதிக் குழுவிலே இந்த உயர்வை நீங்கள் சீர்படுத்தவேண்டும் என்று சொன்னார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்தியாவில் இருக்கிற அனைத்து மாநிலங்களிலும் இந்த உயர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் மற்றவர்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் குறைவாக ஏற்றப்பட்டிருக்கிறது. கேள்வி: இந்த நேரத்தில் விலையை ஏற்றுவதற்கு எங்களுக்கு சிரமமாக இருக்கிறது. மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் இதை…. பதில்: ஒன்றிய அரசு ஒரேயடியாக சொல்லிவிட்டார்கள். மார்ச் 31-ம் தேதிக்குள் இதை ஏற்றவில்லை என்று சொன்னால், இந்த ஆண்டிற்கு வருகிற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த நிதி உங்களுக்கு வராது என்று கட்டளையிட்டார்கள். கேள்வி: நிபந்தனையின் பேரில்தான் இந்த வரி….பதில்: ஆமாம். கேள்வி: இந்த வரி ஏற்றத்தால் எவ்வளவு வருமானம் கூடுதலாக வரக்கூடும். பதில்: ஒவ்வொரு பகுதிகளைப் பொறுத்து, அதாவது 600 சதுர அடி என்றால் இருக்கிற வீட்டிற்குத் தகுந்தவாறு அந்த வரி உயர்வு ஏற்படும். அதாவது பெரு நகராட்சிகளிலே கடந்த காலத்தில் வருவாயை விட கூடுதலாக 100% வரும். கிராமப் பகுதிகளிலே 25%-மும், அதில் கிராமப்புற தாலுகாவில் 30 முதல் 40% அளவிலே வரும். கடந்த முறை 100 என்றால் 140 ரூபாய் வரும். இந்த இடத்தில் 100 என்றால் 200 வரும். அந்த அளவுக்குத்தான் உயர்வு ஏற்படும். கேள்வி: எத்தனை வருஷமாக ஏற்றாமல் வைத்திருந்தோம். பதில்: 24 வருடமாக ஏற்றவில்லை.கேள்வி: கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி இருந்தால் அவ்வளவு சுமை இருந்திருக்காது. இதை மொத்தமாக ஏற்றுவதினால் மக்களுக்கு பாதிப்பு. ஏன் இவ்வளவு காலதாமதமாக…..பதில்: நகராட்சியில் தினந்தோறும் மற்ற மாநிலங்கள் போல் அல்லாமல் தமிழ்நாட்டைப் பொறுத்த அளவு நகரப்பகுதியில் மக்கள் தினந்தோறும் குடியேறுகிற பகுதி என்பது கிட்டதட்ட 58% பேர் இன்றைக்கு நகரப்பகுதியில் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான பணிகளை செய்ய வேண்டும். அதற்காகத்தான் இது செய்யப்பட்டிருக்கிறது. ஏனென்றால், கடந்த ஆட்சியில் ஒரே முறையாக 2018-ஆம் ஆண்டு ஏற்றினார்கள். ஆனால் தேர்தல் இருக்கிறபடியால் நிறுத்தி வைத்துக்கொண்டார்கள். கேள்வி: நீங்கள் வாசிக்கும்பொழுது 2018-ல் சொத்து வரியால் வருவாய் குறைந்துவிட்டது என்று சொன்னீர்கள். 2018-ல் அதிமுக ஏற்றினார்கள். திமுக அப்பொழுது போராட்டம் நடத்தினீர்கள். ஆனால் இப்பொழுது நியாயப்படுத்துகிற மாதிரி இருக்கிறது, சொத்து வரி இத்தனை ஆண்டுகளாக ஏற்றவில்லை, ஒன்றிய அரசின் நிபந்தனையின் பேரில் இப்பொழுது ஏற்றியிருக்கிறார்கள் என்று. ஆனால் அப்பொழுதும் அதிமுக செய்யும்போது அதற்கு எதிராகப் போராட்டம் நடத்தினீர்கள்.பதில்: அப்படியில்லை, அவர்கள் அப்பொழுது 2018-ல் ஒன்றிய அரசு அந்த நிபந்தனை விதித்தது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இப்பொழுது கடுமையாக 15-வது நிதி ஆணையத்தின்படி நீங்கள் ஏற்றினால்தான் பணமே தருவார்கள் என்று, இல்லையென்றால் 15,000 கோடி ரூபாய் வராது. ஆதலால், எல்லா வளர்ச்சிப் பணிகளும் தடைபடும் என்கிற காரணத்தினால் இது செய்யப்படுகிறது இவ்வாறு கூறினார்.