தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து, நேற்று டெல்லி மாடல் பள்ளியைப் பார்வையிட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்துப் பேசினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “இந்தியாவின் கூட்டாட்சி, ஜனநாயகம், பன்முகத்தன்மை, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், கல்வி உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்க நாம் அனைவரும் தனிப்பட்ட கட்சிகளைச் சார்ந்த அரசியல் மனநிலையை விட்டு விலகி ஒன்றிணைந்து ஒற்றுமையே பலம் என்பதை உணரவேண்டும்.
எனவே, டெல்லியில் தி.மு.க கட்சி அலுவலகம் திறப்பது தேசிய அரசியல் அரங்கில் தி.மு.க-வின் அந்தஸ்து உயர்ந்திருப்பதன் அடையாளமாகப் பார்க்க வேண்டாம். தேசிய அரசியலில் தி.மு.க-வுக்கு எப்போதுமே முக்கியத்துவம் இருக்கிறது. இந்த நாட்டின் பிரதமரையும் குடியரசுத் தலைவரையும் நிர்ணயித்த கட்சி தி.மு.க. மேலும், நாடாளுமன்றத்தில் தி.மு.க தான் தற்போது மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக உள்ளது. எனவே, தேசிய அரசியல் மாநில அரசியல் என்று வித்தியாசம் இருப்பதாக நான் உணரவில்லை. தேசிய அரசியல் என்றால் மாநில அரசின் ஒட்டுமொத்த உருவம் தானே. அதனால் இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
ராகுலும், நாங்களும் பா.ஜ.க-வை எதிர்ப்பது வெறுப்பு அரசியல் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், நாங்கள் பா.ஜ.க-வில் இருக்கும் தனிநபர்களை விமர்சிக்கவில்லை. பா.ஜ.க-வின் சித்தாந்தத்தை விமர்சிக்கிறோம். எனவே, எங்களின் விமர்சனங்கள் எல்லா அரசியல்வாதிகளுக்கும் உட்பட்டவை அதிலிருந்து எப்போதுமே பின்வாங்க மாட்டோம்.
காங்கிரஸ் வீழ்ச்சி காண்பதால், மற்ற மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்பது ஒரு சில மாநிலங்களிலிருந்து ஒலிக்கும் குரல். ஆனால் என்னைப் பொருத்தவரை தேசிய அரசியலில் மூன்று கட்சிகள்தான். அதனால், பா.ஜ.க-வை வீழ்த்த காங்கிரஸ் இடதுசாரிகளுடன் அனைத்து கட்சிகளுமே கைகோர்க்க வேண்டும்.
தமிழகத்தில் தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து பா.ஜ.க-வை ஓரம் கட்டி வைத்திருக்கிறோம். ஆக பா.ஜ.க-வை எதிர்க்கும் ஒருமித்த கருத்து கொண்டு சக்திகள் தேர்தலின்போது மட்டும் ஒன்று சேராமல், எப்போதுமே கொள்கை ரீதியான பிணைப்பில் இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை இதைப் போன்றதொரு நட்புறவைக் காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” எனப் பேசினார்.