புதுடெல்லி:
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று காலையில், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேபாள பிரதமர் சேர் பகதூர் தியூபா சந்தித்தார். அப்போது இரு நாட்டு உறவுகள், வளர்ச்சி, வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு பற்றி இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ரெயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்பின்னர், இரு நாடுகளுக்கிடையிலான இணைப்பை அதிகரிப்பதற்கான, வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, பீகாரின் ஜெய்நகரை நேபாளத்தின் குர்தா பகுதியுடன் இணைக்கும் முதல் அகல ரெயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா ஆகியோர் காணொளி வாயிலாக திறந்து வைத்து, அந்த வழித்தடத்தில் ரெயில் சேவையை தொடங்கி வைத்தனர்.
ஜெய்நகர்-குர்தா வழித்தடமானது 35 கிமீ நீளம் கொண்டது. இதில் 3 கிமீ பீகாரிலும் மற்ற பகுதி நேபாளத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.