கொழும்பு:கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நம் அண்டை நாடான இலங்கையில் வன்முறை பரவுவதை தடுக்க, 36 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில், அன்னிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக, அதன் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் ‘காஸ்’ மற்றும் உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வு மட்டுமல்லாமல், தினமும் 13 மணி நேரம் மின் வெட்டு இருப்பதும் பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முழக்கம்
இதையடுத்து, இரு தினங்களுக்கு முன் ஏராளமான பொதுமக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டை முற்றுகையிட்டு, அவர் பதவி விலகக் கோரி முழக்கமிட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது வன்முறை வெடித்தது. ஒரு போலீஸ் பஸ், ஜீப், இரு ‘பைக்’குகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்த மோதலில், ஐந்து போலீசார் காயமடைந்தனர்; ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். வன்முறை தொடர்பாக, 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிலைமை மோசமாவதை உணர்ந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, வன்முறை மேலும் பரவுவதை தடுக்க, நாடு முழுதும், 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். ஏற்கனவே அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட சூழலில், தற்போது ஊரடங்கு உத்தரவும் அமலுக்கு வந்துள்ளது. நாளை காலை 6:00 மணி வரை ஊரடங்கு நீடிக்கும் என அரசு தெரிவித்துள்ளது. தலைநகர் கொழும்பில் ஏராளமான போலீசாரும், ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.போலீசார் பாதுகாப்புடன், அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.
ரகசிய இடம்
இதற்கிடையே அனுருத்தா பண்டரா என்ற சமூக ஆர்வலரை,கொழும்பு போலீசார் பிடித்துச் சென்றுள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். கொழும்புவில் இன்று அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த, அனுருத்தா பண்டாரா சமூக வலைதளம் வாயிலாக அழைப்பு விடுத்திருந்தார். இதையொட்டி அவரை போலீசார் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து உள்ளதாக கூறப்படுகிறது.
மக்களின் கடுமையான அதிருப்திக்கும், கோபத்திற்கும் ஆளாகியுள்ள இலங்கை அரசு, நிலைமையை எப்படி சமாளிக்கப் போகிறது என்பது தான், அங்குள்ள ஊடகங்களில் முக்கிய விவாதப் பொருளாகியுள்ளது.இதற்கிடையே பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பன்னாட்டு நிதியம், இந்தியா, சீனா ஆகிய நாடுகளிடம் மீண்டும் கடன் கேட்க உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
4 கோடி லிட்டர் டீசல் உதவி இலங்கைக்கு இந்தியா உதவி
இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பக்லே கூறியதாவது:இந்தியா ஏற்கனவே 3,500 கோடிரூபாய் மதிப்பில் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றை இலங்கைக்கு வழங்கி வருகிறது.இதுவரை மூன்று சரக்கு கப்பல்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. நான்காவது கப்பல் தற்போது வந்து சேர்ந்துள்ளது. இதில், 4 கோடி லிட்டர் டீசல் வந்துள்ளது. மேலும், உணவுப் பொருட்களுக்கான 3,500 கோடி ரூபாய் கடனுதவியின் கீழ், அரிசி கொள்முதலுக்கு ‘ஆர்டர்’ கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்கள், 40 ஆயிரம் டன் அரிசியை ஏற்றுமதி செய்யத் துவங்கியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து 750 கோடி ரூபாய் மதிப்பிற்கு மருந்து பொருட்களை இறக்குமதி செய்ய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆர்டர் விரைவில் வழங்கப்படும். இலங்கை அவசர உதவி கோரினால் அத்தியாவசிய பொருட்களை விமானம் வாயிலாக அனுப்ப இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.