சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயர்வு தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வர இருக்கிறது. முதல்-அமைச்சரின் பார்வைக்கு வராமல் இத்தகைய அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.
ஏற்கனவே, வரலாறு காணாத பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வினால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற பொதுமக்கள் இந்த சொத்து வரி உயர்வினால் மேலும் பாதிக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை ஒரே கட்டமாக நடைமுறைக்கு கொண்டு வராமல், ஆண்டுக்கு 10 சதவீத வரி உயர்வு என்ற அடிப்படையில் மறுபரிசீலனை செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-
தமிழக அரசு, தற்போது உயர்த்தியிருக்கும் சொத்து வரி மக்களைப் பாதிக்கும் என்பதால் அதனை திரும்ப பெற வேண்டும். சொத்து வரி உயர்வால் சாதாரண மக்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.
தமிழ்நாட்டின் தற்போதைய சூழலில் சொத்து வரியை உயர்த்தாமல், மாற்றுத்திட்டத்தின் மூலம் வருவாயைப் பெருக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:-
தமிழகம் முழுவதும் சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்தி இருக்கிற தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுதான் நீங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு தரப்போவதாக சொன்ன விடியலா?
கொரோனா பாதிப்புக்கு பிறகு முழுமையான இயல்பு நிலை இப்போதுதான் ஏற்பட தொடங்கி இருக்கும் நிலையில், இப்படி ஒவ்வொன்றாக மக்கள் தலையில் இடி விழுவது போல் அறிவிப்புகளை வெளியிடுவது மனசாட்சி இல்லாத செயல். எனவே, சொத்துவரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.