நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள முத்தோரை பாலாடா பகுதியில் பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்திற்குள் ஏகலைவா பள்ளி செயல்பட்டு வருகிறது. உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியான இந்த ஏகலைவா பள்ளியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பழங்குடி மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வரும் நீலகிரியைச் சேர்ந்த பழங்குடி மாணவியிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்ரமணி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி, ஊட்டி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் புகாரின் அடிப்படையில் ஏகலைவா பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமை ஆசிரியர் பழங்குடி மாணவியிடம் அத்துமீறிய விவகாரம் குறித்து பேசி காவல்துறையினர், “12-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி அணிந்திருந்த துப்பட்டாவை பள்ளி தலைமை ஆசிரியர் பிடித்து இழுத்திருக்கிறார். பயந்த அந்த மாணவி துப்பட்டாவை பிடுங்கிக் கொண்டு விடுதிக்கு ஓடியிருக்கிறார். இது தொடர்பாக எங்களிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி (58) மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.
மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தலைமை ஆசிரியர் மாணவியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்திருக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.
இந்த பள்ளியில் பழங்குடி மாணவ மாணவிகளுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை என பெற்றோர் முற்றுகையிட்ட நிலையில், தலைமை ஆசிரியர் ஒருவர் 12-ம் வகுப்பு படிக்கும் பழங்குடி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெற்றோர்களை கலக்கம் அடையச் செய்திருக்கிறது.