புதுடெல்லி: ‘இந்தியா- நேபாளம் இடையேயான பொதுவான எல்லைகளை தவறாக பயன்படுத்தக் கூடாது,’ என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளம் கடந்த 2020ம் ஆண்டில் சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டியது. அப்போதைய பிரதமராக இருந்த சர்மா ஒலி தலைமையிலான நேபாள அரசு, இந்தியப் பகுதிகளான லிம்பியாதுரா, கலாபானி மற்றும் லிபுலேக் ஆகியவற்றை நேபாளத்தின் ஒரு பகுதியாகக் காட்டும் புதிய வரைபடத்தை வெளியிட்டது. இது இந்தியா, நேபாளம் உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கடந்த ஆண்டு புதிய பிரதமரமாக பகதூர் டியூபா பதவியேற்றார். அவர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.டெல்லியில் அவர் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – நேபாளம் இடையே ரயில் சேவையை பிரதமர் மோடியும், டியூபாவும் தொடங்கி வைத்தனர். மேலும், இந்தியாவின் ரூபே பரிவர்த்தனை அட்டைகள் சேவையை நேபாளத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுதவிர, ரயில்வே, எரிசக்தி உள்ளிட்ட 4 துறைகளில் இந்தியா, நேபாளம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.பின்னர் பிரதமர் மோடி அளித்த பேட்டியில், ‘‘இந்தியா மற்றும் நேபாளத்தின் திறந்தவெளி எல்லைகளை யார் ஒருவரும் தவறாக பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து விவாதித்தோம். இந்தியாவுக்கு நேபாளத்துக்கும் இடையேயான நட்புறவு தனித்துவமானது. இதுபோன்ற நட்பு உலகில் எங்கும் காணப்படவில்லை. எங்கள் உறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல ஒன்றிணைந்து செயல்படுவோம்’’ என்றார். ஏற்கனவே சீனாவுடன் இந்தியாவுக்கு எல்லைப் பிரச்னை நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடி நேபாளத்தை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.அரசியலாக்க வேண்டாம்பிரதமர் மோடி, டியூபா சந்திப்பு குறித்து வெளியுறவு செயலாளர் ஹர்ஷவர்தன் சிரிங்லா அளித்த பேட்டியில், ‘‘இரு நாட்டு எல்லைப் பிரச்னை குறித்து சுருக்கமாக விவாதிக்கப்பட்டது. இப்பிரச்னையை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் பொறுப்பான முறையில் தீர்க்க வேண்டும் என்ற பொதுவான புரிதல் இரு நாடுகளுக்கும் உள்ளது. இதை அரசியலாக்குவது தவிர்க்கப்பட வேண்டும்’’ என்றார். முன்னதாக எல்லைப் பிரச்னையை தீர்க்க இருதரப்பு குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென நேபாள பிரதமர் டியூபாவும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார்.