மகாராஷ்டிராவில் பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் ரூ.120-ஐ கடந்துள்ளது.
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை கடந்த நவம்பர் 4-ம் தேதிக்குப் பிறகு உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் அவற்றின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 10 நாட்களாக தினந்தோறும் விலை உயர்வதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் பர்பானி மாவட்டத்தில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.120.54-க்கு விற்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் டீசல் விலை, அவுரங்காபாத்தில் நேற்று மிக அதிகமாக இருந்தது. இம்மாவட்டத்தில் ஒரு லிட்டர் டீசல் ரூ.103.41-க்கு விற்பனையானது. மகாராஷ்டிராவில் நேற்றைய விலை உயர்வுக்குப் பிறகு 27 மாவட்டங்களில் டீசல் விலை 100 ரூபாய்க்கு மேல் உள்ளது.
மும்பையில் டீசல் விலை நேற்று ரூ.101.79 ஆக உயர்ந்தது. பெட்ரோல் விலை மும்பையில் இதுவரை இல்லாத வகையில் ரூ.117.57 ஆக இருந்தது.
தாணே மற்றும் நவி மும்பையில் நேற்று இந்தியன் ஆயில் பங்க்குகளில் பெட்ரோல் விலை ரூ.117.70 ஆகவும் டீசல் விலை ரூ.101.93 ஆகவும் இருந்தது. எச்.பி. பங்க்குகளில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.117.65 ஆகவும் 1 லிட்டர் டீசல் ரூ.101.88 ஆகவும் இருந்தது.