சிறுவயதில் ஓடிப் பிடித்து விளையாடும்போது, அறைக்குள் ஒளிந்திருக்கும் நண்பனை கதவு, ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து கண்டுபிடித்திருப்போம். ஒளிந்திருப்பது ஆயுதம் தாங்கிய எதிரியாக இருந் தால் என்ன செய்வது? அதிலும் அறைக்குள் பதுங்கியபடி தாக்குதல் தொடுக்கும் எதிரியை மேற்கொள்வது எப்படி? எதிரியின் பார்வையில் படாமல், குறிபார்த்து பதிலடி தருவது சாத்தியமா? குறிப்பாக இரவில் இப்படிப்பட்ட சூழலை எப்படி சமாளிப்பது? நேரடியாக அறைக்குள் நுழைவது மிக ஆபத்தானது.
இப்படிப்பட்ட நெருக்கடியான நிலையை பாதுகாப்புப் படையினரும், தீவிரவாத எதிர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப் படையினரும், காவல் துறையினரும் அவ்வப்போது சந்திக்க நேரிடும்.
இத்தகைய சூழலில் பயன்படுத்த, ஓர் ஆயுத அமைப்பை உருவாக்கியுள்ளது, பாதுகாப்பு ஆராய்ச்சிமற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ). இந்த ஆயுத அமைப்பில் துப்பாக்கியைப் பொருத்தி பயன்படுத்தலாம். இதன் முன்பகுதி துப்பாக்கியுடன் இடது, வலது புறங்களில் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் படை வீரர், அறைக்கு வெளியே மறைவாக இருந்தபடி துப்பாக்கியை திருப்பி அறையின் உள்ளேயிருக்கும் இலக்கை நோக்கி சுடமுடியும்.
ஆயுத அமைப்பின் முகப்பில் வீடியோ கேமரா, லேசர் குறிபார்க்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளன. இதனால் வண்ண வீடியோ திரையில் இலக்கை குறிபார்த்து துப்பாக்கியை இயக்கலாம். இரவில் பயன்படுத்த ஏதுவாக வெளிச்சம் உமிழும் விளக்கு, இரவு காட்சி கேமரா ஆகியவையும் உண்டு.
மின்னணு கருவிகள் இயங்க மின்கலனும் இதில்பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு ‘விளிம்பு சுடும் ஆயுதஅமைப்பு’ (Corner Shot weapon System) என்று பெயர்.இது துப்பாக்கியல்ல, துப்பாக்கியை இணைத்து பல்வேறு வசதிகளுடன் பயன்படுத்தும் கருவி என்பதால் ஆயுத அமைப்பு என்று அழைக்கப்படுகிறது.
மகாராஷ்டிராவின் புனே நகரத்தில் உள்ள டிஆர்டிஓ ஆய்வகமான போர்த்தளவாட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இதை உருவாக்கியுள்ளது. எல்லை காக்கும் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாத எதிர் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கும் இந்த ஆயுதம் மிகவும் அத்தியாவசியமானது.
பாதுகாப்புப் படை வீரரை வெளிக்காட்டாமல் துல்லியமாக தாக்குதல் தொடுக்க சாத்தியப்படுத்துவதால், இந்த ஆயுதம் பாதுகாப்புப் படையினருக்கு பலம் கூட்டும் முக்கிய போர்த் தளவாடம் எனலாம். அதிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஆயுதம் உருவாகியிருப்பது கூடுதல் சிறப்பு.