சொத்துவரி உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் மிகக் கடுமையாக பாதிக்கும்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 600 மற்றும் அதற்குக் குறைவான சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 25 விழுக்காடும், 601 முதல் 1200 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு 50 விழுக்காடும், 1201 முதல் 1800 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு 75 விழுக்காடும், 1801க்கு மேற்பட்ட சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 100 விழுக்காடும் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 75 விழுக்காடும், வணிக நிறுவனங்கள் மற்றும் காலிமனைகளுக்கு 100 விழுக்காடும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியோடு 2011-ம் ஆண்டு இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் உள்ள 600 சதுர அடிக்கு குறைவாக உள்ள குடியிருப்புகளுக்கு 25 விழுக்காடும், 601 முதல் 1200 சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 50 விழுக்காடும், 1201 முதல் 1800 சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 75 விழுக்காடும், 1801 சதுர அடிக்கு மேற்பட்ட குடியிருப்புகளுக்கு 100 விழுக்காடும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 75 விழுக்காடும், வணிக நிறுவனங்களுக்கு 100 விழுக்காடும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னையின் பிரதான பகுதிகளில் உள்ள 600 மற்றும் அதற்கு குறைவான சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 50 விழுக்காடும், 601 முதல் 1200 சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 75 விழுக்காடும், 1201 முதல் 1800 சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 100 விழுக்காடும், 1801 சதுர அடிக்கு மேற்பட்ட குடியிருப்புகளுக்கு 150 விழுக்காடும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தொழிற்சாலைகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 100 விழுக்காடும், வணிக நிறுவனங்களுக்கு 150 விழுக்காடும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. குடிநீர் வரி என்பது மாநகராட்சியின் ஆண்டு மதிப்பு அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவதால், அரசின் சொத்து வரி உயர்வு அறிவிப்பு குடிநீர் வரி உயர்வுக்கு தானாகவே வழிவகுக்கும். தமிழக மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டினையொட்டி தி.மு.க.வால் அளிக்கப்பட்ட வெகுமதி.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மாதம் 1,000ரூபாய் தருகிறோம், முதியோர் உதவித் தொகையை 1,500 ரூபாயாக உயர்த்துகிறோம், எரிவாயு உருளைக்கு 100 ரூபாய் தருகிறோம், மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடும் முறையை நடைமுறைப் படுத்துகிறோம்.

பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கிறோம். டீசல் விலையை லிட்டருக்கு 4ரூபாய் குறைக்கிறோம்.நியாயவிலைக் கடை மூலம் உளுத்தம் பருப்பு தருகிறோம். கூடுதல் சர்க்கரை தருகிறோம். கல்விக் கடனை தள்ளுபடி செய்கிறோம். நகைக் கடனை தள்ளுபடி செய்கிறோம் என்று போலி வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, ஆட்சிக்கு வந்தபிறகு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு, நம்பி வாக்களித்த வாக்காளப் பெருமக்களிடம் இருந்து வரிவசூல் வேட்டையை ஆரம்பித்திருக்கிறது தி.மு.க.

இந்தவரி உயர்விற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வரி உயர்வின் மூலம் சொந்த வீடுகளை வைத்திருப்போர் மட்டுமல்லாமல் வாடகைக்கு குடியிருப்போரும் பாதிக்கப்படுவர். சொந்தக் கட்டடங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள், அந்தக் கட்டடங்களில் வாடகைக்கு குடியிருக்கும் ஏழை, எளியோரின் வாடகையினை உயர்த்தக் கூடிய நிலை ஏற்படும்.

இதேபோல், மாதவாடகை அடிப்படையில் கடைகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள் நடத்துவோரும் கூடுதல் சுமைக்கு ஆளாவதோடு, கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையும், தொழிற்சாலைளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையும், பள்ளிமற்றும் கல்லூரிகளின் கட்டணமும் வெகுவாக உயரும்.

இது ஒரு வி‌ஷச் சூழல் போன்றது. விலைவாசி உயர்விற்கும், பணவீக்கத்திற்கும் வழிவகுக்கக்கூடியது. இதனால் அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவர். கொரோனாவில் இருந்து மீண்டு எழுவதற்குள் மீண்டும் ஒரு இடி மக்கள் மேல் விழுந்திருக்கிறது.

இந்த இடியை தாங்கிக் கொள்ளக் கூடிய நிலைமையில் மக்கள் இல்லை. மக்கள் கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மக்கள் வடிக்கும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் ஆயுத மாகிவிடும் என்பதை முதலமைச்சருக்கு இந்தத் தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.

எனவே, அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் சொத்து வரி உயர் வினை முதலமைச்சர் உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அ.தி.மு.க சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், இதனை எதிர்த்து அ.தி.மு.க. மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் நடத்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்… இந்தியாவில் மேலும் 1,096 பேருக்கு கொரோனா பாதிப்பு – 81 பேர் பலி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.