ராம்பூர்ஹட்: மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் உள்ள பர்ஷால் கிராமத்தில் பஞ்சாயத்து துணை தலைவராக இருந்த ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த பகதூர் ஷேக், கடந்த மாதம் 21ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதனால் கிராமத்தில் ஏற்பட்ட வன்முறையில் வீடுகளுக்கு ஒரு கும்பல் தீவைத்ததில் 2 சிறுவர்கள், பெண்கள் உட்பட 8 பேர் உயிருடன் கருகி பலியாகினர். இது தொடர்பாக போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட 9 பேரும் அளித்த வாக்குமூலத்தில் முரண்பாடுகள் உள்ளதால், இவர்களிடம் உண்மையை கண்டறிய உளவியல் ரீதியாக சோதனைகளை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. இதன்படி, விசாரணையின் போது இவர்கள் உண்மையை சொல்கிறார்களா? அல்லது பொய் சொல்கிறார்களா? என்பதை கண்டறிய, உடல் அசைவு, முகபாவனைகளை கண்காணிக்க, உளவியல் நிபுணர்கள் அழைக்கப்பட உள்ளனர். வழக்கமாக, குற்றவாளிகளிடம் இதற்கு முன்பாக உண்மை கண்டறிய, குற்றவாளிகளுக்கு போதை மருந்து செலுத்தி விசாரணை நடத்தப்படும். இது மனித உரிமையை மீறிய செயல் என சர்ச்சை எழுந்ததால், முகபாவனை பரிசோதனை நடத்தப்படுகிறது.