ஆந்திர மாநிலத்தில் தற்போது 13 மாவட்டங்கள் உள்ளன. இந்த 13 மாவட்டங்களை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தவுடன் ஆந்திராவில் உள்ள மாவட்டங்கள் பிரிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றவுடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.
சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது ஆந்திராவின் தலைநகராக அமராவதியை தலைநகராக அறிவித்து பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றவுடன் ஆந்திராவின் தலைநகராக 3 இடங்களை அறிவித்தார். இதையடுத்து ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் இரண்டாக பிரிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தெலுங்கு வருட பிறப்பு நாளில் மாவட்டங்கள் பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு நாளை முதல் 26 மாவட்டங்களாக உதயமாகிறது. நாளை திங்கட்கிழமை காலை 9.05 மணி முதல் 9.45 வரை புதிய மாவட்டங்கள் குறித்த இறுதி அறிக்கை வெளியிடப்பட்டு அதிகாரபூர்வமாக மாவட்டங்கள் செயல்பாட்டுக்கு வருகிறது.
புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சித்தூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு சித்தூரை தலைமையிடமாகக் கொண்டு சித்தூர் மாவட்டமும், திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு பாலாஜி மாவட்டம் நாளை முதல் செயல்பட உள்ளது.
பாலாஜி மாவட்ட கலெக்டராக வெங்கட்ரமணா ரெட்டியும், போலீஸ் சூப்பிரண்டாக பர்மேஷ்வர் ரெட்டியும் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய கலெக்டர் அலுவலகம் திருச்சானூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பத்மாவதி நிலையம் தற்காலிக கலெக்டர் அலுவலகமாக செயல்படுகிறது. பாலாஜி மாவட்டத்தில் 4 வருவாய் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பதி, காளஹஸ்தி, கூடூர் சூலூர்பேட்டை வருவாய் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.