கட்சி விதிகளின்படி அமைப்பு தேர்தல் கடந்த ஆண்டு இறுதியில் நடத்தி முடித்திருக்க வேண்டும் என்பதால், அதிமுகவின் அமைப்பு தேர்தல் பல்வேறு கட்டமாக நடந்து வருகிறது.
இதில், முதல் கட்டமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல், கிளை, வார்டுகளுக்கு தேர்தல், கிளை கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு, நகர வார்டு நிர்வாகிகள், மாநகராட்சி வட்ட நிர்வாகிகள் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.
மூன்றாவது கட்டமாக 25 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், பேரூராட்சி நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டன.
இன்னும் 3 கட்ட தேர்தல்கள் அடுத்தடுத்து நடக்க உள்ள நிலையில், வரும் மே மாதம் இறுதியில் அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டலாம் என்று ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியான தகவலின்படி, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களில் சில மாற்றங்கள் செய்து கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த தலைமை திட்டமிட்டு உள்ளதாகவும், மே மாதம் 2-வது வாரம் வரை சட்டசபை கூட்டம் நடைபெறுவதால், மே மாத இறுதியில் பொதுக்குழுவை கூட்ட உள்ளதாக வெளியான அந்த தகவல் தெரிவிக்கிறது.