ஸ்ரீகாளஹஸ்தி: சித்தூர் மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு புத்தாண்டு அன்று பிக்ஷால கோபுரம் அருகே தேர் வீதியில் உள்ள பக்த கண்ணப்பர் கோயிலுக்கு சீர்வரிசை பொருட்கள் கொண்டு செல்வது வழக்கம். அதன்படி, தெலுங்கு புத்தாண்டு தினமான நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில், கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜூ தலைமையில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு, ஸ்ரீகாளஹஸ்தி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோயில் அதிகாரிகள் சீர்வரிசை பொருட்களை தலைமீது சுமந்து ஊர்வலமாக பக்த கண்ணப்பர் கோயிலுக்கு சென்றனர்.தொடர்ந்து, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் பக்த கண்ணப்பர் கோயில் அர்ச்சகர்களிடம் வழங்கப்பட்டது. பின்னர், அந்த பட்டு வஸ்திரம் கண்ணப்பருக்கு சாற்றி சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.