விருதுநகரைச் சேர்ந்த 23 வயது பட்டியல் வகுப்பு இளம்பெண் ஒருவர் சூலக்ரையிலுள்ள விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆயுதப்படை காவலர் மீது பாலியல் வன்கொடுமை புகார் ஒன்றை அளித்தார். இது விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக அந்த இளம்பெண் அளித்த புகார் மனுவில்,
“விருதுநகர் ஆயுதப்படைக் காவலராக பணிபுரிந்து வரும் கண்ணன் என்பவருக்கும் எனக்கும் முகநூல் வழியாக பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தோம். என்னை திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஆயுதப்படைக் காவலர் கண்ணன் என்னோடு நெருங்கிப் பழகினார். ஆளில்லாத சமயம் கண்ணன் அவருடைய ஆயுதப்படை அலுவலர் குடியிருப்புக்கு என்னை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதைத்தொடர்ந்து நான் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியபோது, `உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது, இது தொடர்பாக நீ வெளியே சொன்னால் எனக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து உன்னை போலீஸில் புகார் செய்வேன்’ என மிரட்டினார்.
இதே போன்று பலமுறை என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். தற்போது நான் இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளேன். எனவே என்னை திருமணம் செய்துக்கொள்வதாக சொல்லி ஏமாற்றிய ஆயுதப்படைக் காவலர் கண்ணன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்தப் புகார் மனு தொடர்பாக அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.