ஹீரோயின் பிம்பம் தாண்டி நல்ல கதாபாத்திரமும் கொண்டாடப்படும்: நடிகை பார்வதி
பத்திரிகையாளராக கலை பயணத்தை துவங்கி, ஆர்.ஜெ.,- வி.ஜெ., சின்னத்திரை, மாடலிங் என பல துறைகளில் மக்களின் மனம் கவர்ந்த பார்வதி, தற்போது வெள்ளித்திரையில் ஜொலிக்க துவங்கியுள்ளார். வாள் வீசும் பார்வை… வலை வீசும் வார்த்தையால் … சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக மனம் திறந்து பேசியதாவது:
உங்களை பற்றி
சொந்த ஊர் மதுரை. அப்பா வழக்கறிஞர், அம்மா பேராசிரியை. சகோதரர், சகோதரி இருவரும் வழக்கறிஞர்கள். நான் சென்னையில் பி.ஏ., ஜெர்னலிசம், மதுரையில் எம்.எஸ்.சி., ஜெர்னலிசம் படித்தேன்.
ஆர்.ஜெ., டூ வி.ஜெ., இந்த மாற்றம் எப்படி
மதுரையில் இரு ஆண்டுகள் ஆர்.ஜெ.,வாக பணியாற்றினேன். சென்னையில் படிக்கும் போதே யுடியூபில் சினிமா ரிவியூ பண்ணினேன். விஷூவல் மீடியாவில் தொடர வேண்டும் என்பதே ஆசை. அதனால் சென்னை சென்று வி.ஜெ., ஆனேன். ஆர்.ஜெ.,வாக இருக்கும் போது என் குரல் மக்களுக்கு பரீட்சயமானது. இப்போது எனது முகம் பரீட்சயமாகியுள்ளது. பார்வதியின் தெருக்கூத்து நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் மூலம் இளைஞர்களிடம் பிரபலம் ஆனேன். தெருக்கூத்து பேட்டிகள் மீம்ஸ் கிரியேட்டர்களால் அதிகம் பகிரப்பட்டது.
டி.வி., நிகழ்ச்சி பற்றி
சர்வைவர் வாய்ப்பு எதிர்பாராதது. ஆக் ஷன் கிங்குடன் திரையில் தோன்றியது மகிழ்ச்சி. நான் இயற்கையை நேசிப்பேன். தீவில் இருந்த நாட்கள் மறக்க முடியாதவை. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றது சிறப்பாக இருந்தது. இரண்டு நிகழ்ச்சிகளுமே எனக்கான அடையாளத்தை பெற்று தந்தன.
முதல் படம் பற்றி
சிவகுமாரின் சபதம் படத்தில் சிறிய கேரக்டர் தான். ஆனாலும் நான் நிஜ வாழ்க்கையில் எப்படியோ அதுபோலவே அந்த கதாப்பாத்திரம் அமைந்தது.
நுாறு கோடி வானவில் படத்தில் உங்கள் ரோல்
பூ படம் இயக்கிய சசியின் படம். நிறைய பயிற்சிக்கு பின் இதில் தேர்வானேன். இந்த படத்தில் நல்ல கேரக்டர் அமைந்துள்ளது. ஹரீஷ் கல்யாண் உடன் நடித்தது சந்தோஷம்.
கோவை சரளா உடன் நடித்த அனுபவம்
நிறைய அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொண்டார். நடிப்பு நுணுக்கங்களை கூறினார். பல ஆண்டுகளாக சினிமாவில் பயணிப்பவர்; அவருடனான அனுபவம் நிறைய கற்றுக்கொடுத்தது.
பார்வதியை வெள்ளித்திரையில் மட்டும் தான் பார்க்க முடியுமா
டிவி.,யில் எப்போதும் போல் பார்க்கலாம். அனைத்து தளங்களிலும் இயங்க வேண்டும் என்பது ஆசை. சினிமாவில் தனிக்கவனம் செலுத்தி வருகிறேன். டான்ஸ், இசை கற்று வருகிறேன்.
ஹீரோயினாக எப்போது பார்க்கலாம்
நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். மனோரமா, ஊர்வசி, சரண்யா போன்று குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆசை. ஹீரோயின் பிம்பத்தை தாண்டி இன்றும் மக்களால் இவர்களது கதாப்பாத்திரம் கொண்டாடப்படுகிறது. அதற்காக ரோயின் ரோல் வேண்டாம் என்றில்லை. வாய்ப்பு கிடைத்தால் அந்த அவதாரம் எடுக்கவும் ரெடி.