IPL 2022: பிரஷர் சேஸில் பொல்லார்டைவிட இரண்டு மடங்கு ஸ்ட்ரைக் ரேட் – மும்பையின் 19 வயது திலக் வர்மா!

விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு அஷ்வின் அவ்வளவு தீவிரமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை பார்த்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டன. தனக்கு அதிக சவால் கொடுக்கும் தன்னுடைய ஈகோவை சுரண்டி பார்க்கும் வீரர்களுக்கு எதிராக விக்கெட் வீழ்த்தும்போது மட்டுமே அஷ்வின் கொஞ்சம் கூடுதல் எமோஷனலோடு செலிப்ரேஷன்களில் ஈடுபடுவார். மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் அஷ்வின் அப்படியான செலிப்ரேஷனில் ஈடுபட்டிருந்தார்.

ஆனால், அஷ்வினுக்கு எதிர்முனையில் நின்று அவருக்குச் சவாலளித்தது ஒரு மேக்ஸ்வெல்லோ கெய்லோ அல்ல. 19 வயது இளைஞன் திலக் வர்மா!

மும்பை அணி இந்த சீசனை ரொம்பவே சுமாராக தொடங்கியிருக்கிறது. ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்திருக்கிறது. அணியின் செயல்பாடுகள் குறித்து அத்தனை ரசிகர்களும் அப்செட்டாகவே இருக்கின்றனர். இந்நிலையில்தான், அந்த அணியில் இருளைக் கிழித்தெறியும் தீப்பொறியாக வெளிச்சக்கீற்றுகளைப் பரவச் செய்திருக்கிறார் திலக் வர்மா. ஆடியிருப்பது இரண்டே போட்டிகள். ஆனால், அதற்குள் பும்ராவை போல ஹர்திக்கை போல ஒரு சரியான திறமையாளனை மும்பை மீண்டும் கண்டெடுத்துவிட்டது எனும் பேச்சு பரவலாகத் தொடங்கியிருக்கிறது.

திலக் வர்மா

திலக் வர்மா ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். எளிய குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இவருடைய குடும்பத்தினர் பலருமே பலவிதமான விளையாட்டுகளில் ஆர்வமாக ஈடுபடுபவர்கள். சகோதரர் பேட்மிண்டனில் கவனம் செலுத்த திலக் வர்மா பேட்டைத் தூக்கிக் கொண்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார். பயிற்சியாளர்கள் பலரின் உதவியாலும் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடிக்கொண்டே இருந்தவர், ஒரு கட்டத்தில் வினோ மங்கட், கூச் பீஹார், விஜய் மெர்கண்ட் போன்ற U16, U19 தொடர்களில் கலக்க ஆரம்பிக்கிறார். இதன்மூலம், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது. 2020 உலகக்கோப்பை தொடரில் பிரியம் கர்க் தலைமையிலான இந்திய அணியிலும் இடம்பிடித்திருந்தார். அந்தத் தொடரில் ஓப்பனர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் சக்சேனாவுமே பல போட்டிகளை வென்று கொடுத்ததால் திலக் வர்மாவிற்கு நிறைய போட்டிகளில் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், வாய்ப்பு கிடைத்த ஒன்றிரண்டு போட்டிகளில் நன்றாக ஆடியிருந்தார்.

குறிப்பாக, வங்கதேசத்திற்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியா கடுமையாக திணறியிருந்தது. ஆனால், அந்த போட்டியில் திலக் வர்மா ஜெய்ஸ்வாலுடன் அமைத்த 94 ரன்கள் பார்ட்னர்ஷிப்பே இந்திய அணி ஓரளவுக்கு கௌரவமாக 170+ ஸ்கோரை எடுக்கக் காரணமாக அமைந்தது.

சமீபத்தில் நடந்திருந்த விஜய் ஹசாரே மற்றும் சையத் முஷ்தாக் அலி தொடரிலும் சிறப்பாக ஆடியிருந்தார். விஜய் ஹசாரே தொடரில் இரண்டு சதங்களை அடித்திருந்தார். சையத் முஷ்தாக் அலி டி20 தொடரில் மொத்தமாக 215 ரன்களை 147 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருந்தார்.

குறிப்பாக சண்டிகருக்கு எதிராக 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த 61 ரன்களும், காலிறுதி போட்டியில் குஜராத்துக்கு எதிராக 50 பந்துகளில் அடித்த 75 ரன்களும் திலக் வர்மாவின் மீது கூடுதல் வெளிச்சத்தை பாய்ச்சின. இந்த இன்னிங்ஸ்கள் ஐ.பி.எல் அணிகளின் குழுக்களையும் கவர்ந்திருந்தன. இதன்மூலம் பிப்ரவரியில் நடந்த ஏலத்தில் திலக் வர்மாவிற்கு நல்ல டிமாண்ட் இருந்தது.

Tilak

மும்பை, சென்னை, ஹைதராபாத் அணிகள் இவருக்காக போட்டி போட்டனர். கடைசியில் மும்பை அணி திலக்கை 1.7 கோடிக்கு வாங்கியது. ஊதா ஜெர்சியுடன் திலக் வர்மா ஐ.பி.எல்-லுக்குள் என்ட்ரி கொடுத்தார்.

டெல்லிக்கு எதிரான முதல் போட்டியிலேயே திலக் வர்மாவிற்கு ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் 15 பந்துகளில் 22 ரன்களை மட்டுமே அடித்திருப்பார். ஆனால், இவரிடம் எதோ இருக்கிறதென்பதை அந்த சின்ன இன்னிங்ஸே காட்டி கொடுத்தது. அவர் ஆடிய ஷாட்கள் அப்படி இருந்தன. கமலேஷ் நாகர்கோடி, கலீல் அஹமது ஆகியோரை லாகவமாக ஸ்கொயரிலும் ஃபைன் லெக்கிலும் அடித்த அடி அத்தனை க்ளாஸாக இருந்தது. இதனால் தொடர்ந்து ராஜஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் திலக்கிற்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைத்தது. மும்பை 190+ ஸ்கோரை சேஸ் செய்கையில் மிடில் ஓவர்களில் இறங்கி 33 பந்துகளில் 61 ரன்களை எடுத்திருந்தார்.

Tilak

பொல்லார்ட் 90 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய போட்டியில் திலக் வர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 184. மிகச்சிறப்பாக திலக் வர்மா சேஸிங்கை முன்னெடுத்து சென்றார்.

அவர் ஒவ்வொரு பௌலரையும் அட்டாக் செய்த விதம் அதுதான் இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது. நவ்தீப் சைனியின் பந்தை க்ரீஸுக்குள் நின்றாவரே லாங் ஆஃபில் பறக்கவிட்டார். சஹாலின் திடீர் கூக்ளிக்களையும் மேஜிக்கலான லெக் ப்ரேக்குகளையும் க்ரீஸை விட்டு இறங்கி வந்து அட்டகாசமாக ஆடியிருந்தார்.

அஷ்வினுக்கு எதிராக மட்டும் இரண்டு சிக்சர்களை அடித்திருந்தார். ஒன்று ஸ்கொயரில் ஃப்ளாட்டாகச் சென்றிருந்தது. இன்னொன்று ரிவர்ஸ் ஹிட்டாக தேர்டுமேனில் சிக்சராகியிருந்தது.

அஷ்வினின் பந்தில் சிக்சர் அடிக்க கெயிலே திணறுவார். ஆனால், இந்த 19 வயது இளைஞன் பதற்றமேயின்றி முட்டி போட்டு பேட்டை திருப்பி அடித்த அடி அதுதான் அஷ்வினின் ஈகோவை சுரண்டியது. திலக் வர்மா அடுத்த பந்திலேயே போல்ட் ஆனார். அஷ்வின் வழக்கத்தை விட கூடுதல் துடிப்போடும் ஆவேசத்தோடும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அந்த கொண்டாட்டம்தான் திலக் வர்மா ஆட்டத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதற்குச் சான்று.

சூர்யகுமார் யாதவ் குணமாகி வந்துவிட்டால் அன்மோல் அல்லது திலக் வர்மா பென்ச்சுக்குச் செல்ல வேண்டி வரும். அந்த நெருக்கடியிலும் திலக் இப்படி ஒரு தரமான இன்னிங்ஸை ஆடியிருக்கிறார். ஆக, பென்ச்சில் உட்கார போவது யார் எனும் கேள்வியே இனி எழப்போவதில்லை.

Sangakkara – Tilak

“உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் திலக் வர்மா பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. மும்பைக்கு ஆடுகிறார் என்றவுடன தான் சிலரிடம் அவரைப் பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டேன். இவரின் ஆட்டத்தை காண ஆர்வமாக இருக்கிறேன்” டெல்லிக்கு எதிரான போட்டியில் திலக் வர்மா இறங்கியபோது கமென்ட்ரியில் கவாஸ்கர் இப்படிப் பேசியிருந்தார். கவாஸ்கருக்கு மட்டுமில்லை. அப்போது பெரும்பாலானோருக்கு திலக் வர்மா யார் என்றே தெரியாது. ஆனால், நான்கே நாள்கள் இடைவெளியில் ஒரே இன்னிங்ஸில் தன்னுடைய திறன் என்ன என்பதைக் காட்டி அத்தனை பேரையும் தன்னைப் பற்றி தேட வைத்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸிலிருந்து இன்னொரு நட்சத்திரம் உருவாகி உச்சத்துக்குச் செல்லப்போகிறது. ஒரு நாயகன் உதயமாகிறான்! Meaner, Leaner, Stronger!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.