புதுடில்லி:நாட்டில், 121 ஆண்டுகளுக்கு பின் மார்ச் மாதம் வெயில் வாட்டி வதைத்து உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
பொதுவாக ஏப்., மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு, பிப்., இறுதி முதல், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருந்தது.மார்ச் மாதம் இதுவரை இல்லாத அளவு வெயில் வாட்டியது.
இதன்படி, 121 ஆண்டுகளுக்கு பின் மார்ச் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. கடந்த 1901ல், மார்ச் மாதம் வெயில் கடுமையாக இருந்துள்ளது. அதேபோல் கடந்த மாதம் வெயில் சுட்டெரித்து உள்ளது.அதாவது கடந்த மாதம், வழக்கத்தை விட 35 டிகிரி வெயில் அதிகம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
இதுகுறித்து, புனே வானிலை ஆய்வு மைய கால நிலை கணிப்பு குழு தலைவர் ஸ்ரீஜித் கூறியதாவது:கடந்த மாதத்தின் பிற்பகுதியில், நாடு முழுதும் வெயில் அதிகமாக இருந்தது. இதற்கு, மழை இல்லாதது ஒரு காரணம். கடந்த மாதம் இரு வெப்ப அலைகளும் இருந்தன. ஒரு சூறாவளி எதிர்ப்பு சுழற்சி உருவாகி, மேற்கு பகுதியிலிருந்து வடக்கு மற்றும் மத்திய இந்தியாவிற்கு அதிக வெப்பம் பரவ வழிவகுத்தது. மேகங்கள் இல்லாத வானம் நேரடியாக சூரிய ஒளியை நிலத்தில் பாய்ச்சியது. ஒட்டுமொத்த புவி வெப்பமடைதலும் முக்கிய காரணங்களில் ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement