ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின், துவக்க வீராக களமிறங்கிய கேப்டன் மயங்க் அகர்வால் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் இணைந்த பனுகா ராஜபக்ச 9 ஓட்டங்களில் வெளியேறினார்.
இதையடுத்து ஷிகர் தவான்-லிவிங்ஸ்டன் ஜோடி, சென்னை அணியின் பந்துவீச்சை அதிரடியாக கையாண்டு அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
அணியின் எண்ணிக்கை 109-ஆக இருந்தபோது, ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். அவர் 33 ஓட்டங்கள் சேர்த்திருந்தார்.
மறுமுனையில் அரை சதம் கடந்து முன்னேறிய லிவிங்ஸ்டன், 60 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார். அவர் 32 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 60 ஓட்டங்கள் எடுத்தார். ஷிகர் தவான், லிவிங்ஸ்டன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 95 ஓட்டங்கள் குவித்தனர்.
அதன்பின்னர் ஜிதேஷ் சர்மா 26 ஓட்டங்கள், ஷாரூக் கான் 6 ஓட்டங்கள், ஓடியன் ஸ்மித் 3 ஓட்டங்கள், ராகுல் சாகர் 12 ஓட்டங்கள் எடுக்க, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
காகிசோ ரபாடா 12 ஓட்டங்களுடனும், வைபஸ் அரோரா ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். சென்னை அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டான், பிரிட்டோரியஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 181 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
சென்னை அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இன்றைய ஆட்டம் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டம் ஆகும்.