புதுச்சேரி : ‘புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு பா.ஜ.,வின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது’ என காங்., எம்.எல்.ஏ., குற்றம்சாட்டியுள்ளார்.லாஸ்பேட்டை தொகுதி காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன் விடுத்துள்ள அறிக்கை;புதுச்சேரி மாநிலத்தில் கடந்த காங்., ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தியபோது, ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவற்றை ரோட்டில் போட்டு உடைத்து பா.ஜ., போராடியது.
இன்று அதைவிட பலமடங்கு உயர்ந்துள்ள மின் கட்டணத்திற்கு எதிராக வாய் திறக்காமல் உள்ளது பா.ஜ.,வின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.தற்போதைய அறிவிப்பின்படி மின்சாரம் 100 யூனிட் வரை ரூ.1.55 லிருந்து ரூ.1.90 என்றும், 101-முதல் 200 யூனிட் வரை ரூ.260லிருந்து 2.90 என உயர்த்தப்பட்டுள்ளது. 201 முதல் 300 யூனிட் ரூ.4.65ல் இருந்து ரூ.5.00 எனவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட் ரூ.6.05ல் இருந்து ரூ.6.45 என உயர்ந்துள்ளது.
மேலும், வீட்டு இணைப்புக்கு நிரந்தர கட்டணமாக, உபயோகிக்கும் அனைத்து கிலோவாட் மின்சாரத்திற்கும், மொத்தமாக மாதம் ரூ.45 என்று இருந்ததை, ஒவ்வொரு கிலோ வாட்டுக்கும் தனித்தனியாக மாதம் ஒன்றுக்கு ரூ.30 என உயர்த்தி உள்ளது.முதல்வர் தலையிட்டு உடனடியாக மின் கட்டண உயர்வை தடுத்து நிறுத்தி, அதனை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தொகுதி மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement