சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில் பாலம் கட்டுவதற்காக குடியிருப்புகள் இடிக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் வசிக்கும் மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சந்தித்து பேசினார்.தொடர்ந்து, வீடுகள் இடிக்கப்படுவதை கண்டித்து நாம் தமிழர்கட்சியினர் கோஷம் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘‘மக்கள்நம்பிக்கையோடு இருக்க வேண்டும். பயப்பட வேண்டாம். எந்தகட்டிடத்தை இடித்தாலும் நாம் தமிழர் கட்சி அங்கு வந்து போராடும். குடிநீர், மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் திடீரென ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்க வருவதை ஏற்க முடியாது’’ என்றார்.
செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன், சீமான் திடீரென மயங்கிவிழுந்தார். கட்சி நிர்வாகிகள் முதலுதவி அளித்து அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி அருகில் உள்ளமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சை முடிந்து சீமான்பிற்பகலில் வீடு திரும்பினார்.
‘வெயிலில் நின்றுகொண்டே செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்ததாலும், அலைச்சல், ஓய்வின்மையாலும் சீமான் சோர்வுற்றார். முழு உடல்நலப் பரிசோதனைக்கு பிறகு வீடு திரும்பினார். தற்போது நலமாக உள்ளார்’ என்று நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.