டெல்லி: இந்தியாவில் அதிகரிக்கப்பட்டு வரும், இலவச திட்டங்களால், இலங்கையைப் போல, இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என பிரதமர் மோடியிடம், அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். சுமார் 4மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா, அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனை Tட்டத்தில், பெரிய வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க புதிய கண்ணோட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பிரதமர் வலியுறுத்தினார். உயர்மட்ட அதிகாரிகளை தங்கள் சொந்த அமைச்சகங்களுக்குப் பொருந்தாவிட்டாலும், புதிய யோசனைகளை தெரிவிக்கும்படி கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் கருத்தைப் பேசுமாறு மோடி ஊக்குவித்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன.
இந்த கூட்டத்தின் போது, சில மாநிலங்களால் அறிவிக்கப்பட்ட “ஜனரஞ்சக” திட்டங்கள் மீது இரண்டு செயலாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். குறிப்பாக 3 கேஸ் சிலிண்டர் இலவசம் என்ற பாஜகவின் இலவச அறிவிப்பு உள்பட இலவசங்கள் வாரி வழங்குவது பொருளாதார தேக்கத்த ஏற்படுத்தும் வாய்ப்பை உருவாக்கும் என கூறி பிரதமரின் கவனத்தை ஈர்த்தனர், இவை பொருளாதார ரீதியாக சாத்தியமற்றது மற்றும் மாநிலங்களின் நீண்ட கால நலன்களை பாதிக்கும் என்று கூறினர். ஒரு செயலாளர் “ஜனரஞ்சக திட்டங்கள்” தொடர்பாக இலங்கையின் உதாரணத்தை மேற்கோள் காட்டி பேசியதாகவும் தகவல் வெளியாக உள்ளது.
பல அதிகாரிகள், அரசியல் கட்சிகள் அறிவித்து வரும் இலவச திட்டங்கள் குறித்து கவலை தெரிவித்தனர். சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தலின்போது, பாஜக உள்பட அரசியல் கட்சிகள் அறிவித்த இலவச திட்டங்களால், நாடு பொருளாதார சிக்கலில் சிக்கும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்ததுடன், பல இலவச திட்டங்களால், பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாதவை என்று சுட்டிக்காட்டியதுடன், அதிகரிக்கப்பட்டு வரும் இலவச திட்டங்களால், இலங்கையில் ஏற்பட்டதை போல் பொருளாதார நெருக்கடி நம் நாட்டிலும் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது எச்சரிக்கை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.