நியூயார்க்-அமெரிக்காவின் நியூயார்க்கில், பிரசித்திபெற்ற விநாயகர் கோவில் அமைந்துள்ள தெரு, ‘கணேஷ் டெம்பிள் ஸ்ட்ரீட்’ என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், ஏராளமான இந்திய வம்சாவளிகள் வசித்து வருகின்றனர்.இங்கு, நியூயார்க்கில் உள்ள குயின்ஸ் கவுன்டியில், மிகப் பழமையான விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. 1977ம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட இந்த கோவில் தான், வட அமெரிக்காவில் கட்டப்பட்ட முதல் கோவிலாகும்.மத சுதந்திரம் மற்றும் அடிமை எதிர்ப்பு இயக்கத்தை வழிநடத்திய பிரபல ஆர்வலரான ஜான் பவுனேவின் நினைவாக, இந்த கோவில் அமைந்துள்ள தெருவுக்கு, பவுனே தெரு என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது.இந்நிலையில், இந்த புராதன விநாயகர் கோவிலை கவுரவிக்கும் விதமாக, இந்த தெரு, கணேஷ் டெம்பிள் ஸ்ட்ரீட் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெயர் மாற்றும் விழா, 2ம் தேதி நடந்தது.இதில், நியூயார்கில் உள்ள இந்திய துணை துாதரகத்தின் அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்வால், குயின்ஸ் கவுன்டி தலைவர் டோனோவன் ரிச்சர்ட்ஸ், நியூயார்க் மேயர் அலுவலகத்தின் வர்த்தகம், முதலீடு துறைகளுக்கான துணை கமிஷனர் திலீப் சவுகான் ஆகியோர் பங்கேற்றனர்.
Advertisement