இந்தியாவில் உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படாமல் இருந்துவந்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாள்களாகவே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இதனால் பொது மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடத்தில் பேசுகையில், “எரிபொருள் விலை உயர்வைச் சமாளிக்க மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. இந்த நெருக்கடியான சூழலுக்கு பா.ஜ.க தான் காரணம். உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு நாட்டிற்கு அவர்கள் கொடுத்த பரிசு இது. இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார பிரச்னைகளுக்குத் தீர்வு காண அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இந்த பொருளாதார பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், ராஜஸ்தான் ஆகிய இடங்களிலிருந்து நிலக்கரி வருகிறது. தற்போது இலங்கையை விட இந்தியாவின் பொருளாதார நிலை மோசமாக உள்ளது. நமது நாட்டை இலங்கையுடன் ஒப்பிட்டுப் பேசவில்லை. ஆனால், கடந்த இரண்டு வாரங்களில் பெட்ரோல் மட்டும் டீசல் விலை 10 முறை உயர்த்தப்பட்டுள்ளது. பாஜக மக்களின் குரலை அடக்க வேண்டாம்” என்றார்.