ஆசிரியர் தகுதித் தேர்வைத் தவறவிடும் 50,000க்கும் மேற்பட்ட மாணவர்கள்.. அரசு உடனடி நடவடிக்கை எடுக்குமா?

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) முதலாம் ஆண்டு பி.எட். தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதால், 50,000 மாணவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET) விண்ணப்பிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் தருவாயில் உள்ளனர்.

ஆட்சேர்ப்பு தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 13, அதற்கு முன் முடிவுகள் வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. “கல்லூரி தேர்வுகள் சமீபத்தில் நடத்தப்பட்டன. இறுதித் தேர்வு பிப்ரவரி 16 அன்று முடிந்தது. எனவே, முடிவுகள் வெளிவருவதற்கு கால அவகாசம் எடுக்கும், மேலும் மாணவர்கள் இந்த முறை டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் எம் கோவிந்தன் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

தொடக்கக் கல்வியில் டிப்ளமோ படித்தவர்கள் (DTEd) அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரை கற்பிக்க டெட் தாள் I க்கு விண்ணப்பிக்கலாம், பி.எட். இளங்கலை பட்டதாரிகள் 6 முதல் 10 வகுப்புகளைக் கையாள்வதற்கான தாள் II க்கு விண்ணப்பிக்கலாம்.

இரண்டாம் ஆண்டு பிஎட் மாணவர்களும் தங்களது முதலாம் ஆண்டு மதிப்பெண் பட்டியலை பதிவேற்றம் செய்து தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

 டெட் தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TNTRB) நடத்தப்படுகிறது. கோவிட் மற்றும் லாக்டவுன்கள் பி.எட். மாணவர்களின் முதலாம் ஆண்டு தேர்வுகளை தாமதப்படுத்தியது. இறுதியாக இந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்டது.

அவர்களின் படிப்பு முடியும் தருவாயில் உள்ளது, ஆனால் அவர்கள் இன்னும் டெட் தேர்வை இழக்க நேரிடும். “விதிகளின்படி, ஆட்சேர்ப்புத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு டெட் விடுபட்டது எங்களுக்கு பெரும் இழப்பாகும்.

தமிழகத்தில் உள்ள 600 பிஎட் கல்லூரிகளில் 50,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பிஎட் முதலாம் ஆண்டு தாள்களின் மதிப்பீடு அந்தந்த கல்லூரியிலேயே மேற்கொள்ளப்படுகிறது. எனவே, அதிகாரிகள் தாமதமின்றி முடிவுகளை வெளியிட வாய்ப்புள்ளது,” என மாணவர்கள் தெரிவித்தனர்.

எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் அல்லது ஏப்ரல் 13ம் தேதிக்குள் முதலாம் ஆண்டு பிஎட் தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு, அதிகாரிகளை கேட்டுக் கொள்ள வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.