ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் போதை விவகாரம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 148 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவ, மாணவிகள், சினிமா, அரசியல் பிரபலங்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள், தொழிலதிபர்களின் வாரிசுகள் என பலர் போதை தடுப்பு சட்டத்தில் சிக்கி விசாரணைக்கு உள்ளாகி வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக தெலுங்கு திரைப்பட உலகை சேர்ந்த இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் பலர் போதை தடுப்பு பிரிவினராலும், கலால் துறையினராலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். போதை பொருள் புழக்கத்தில் நைஜீரியா நாட்டை சேர்ந்த சிலரையும், உள்ளூர்வாசிகள் சிலரையும் கலால் துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு மும்பை போதை கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
இந்நிலையில், மீண்டும் ஹைதராபாத் நகரங்களில் உள்ள பப்புகள், இரவு கேளிக்கை விடுதிகள், ரெஸ்டாரன்ட்டுகள், கிளப்புகள் போன்ற இடங்களில் போதை பொருட்கள் அதிக புழக் கத்தில் இருப்பதாக அமலாக்கப் பிரிவினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் தெலங்கானா மாநில ஆணையர் சக்ரவர்த்தி தலைமையில் நேற்று முன்தினம் இரவு பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரபல தனியார் ரெஸ்டாரன்ட்டில் உள்ள ஃபுட்டிங் அண்ட் மிங்க் பப்பில் கலால் துறையினர், அமலாக்கப் பிரிவினர் மற்றும் போலீஸ் துறையினர் என நள்ளிரவு 1.30 மணிக்கு நுழைந்து சோதனை நடத்தினர்.
அப்போது வெளிநாட்டில் இருந்து இந்த கிளப்புக்கு கொகைன் வருவது தெரிய வந்துள் ளது. மேலும் இங்கு 18 வயதுக்கு கீழ் உள்ள மைனர் சிறார்களையும் கிளப்புக்குள் அனுமதிப்பது விசார ணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக கிளப் நிர்வாகிகள் அனில், அபிஷேக் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக 90 இளைஞர்கள், 38 இளம்பெண்கள், 18 ஊழியர்கள் மற்றும் 2 நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரியின் மருமகன் கிரண்ராஜ் மற்றும் கிளப் பார்ட்னர் அர்ஜுன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இவ்வழக்கில் நடிகர் சிரஞ்சீவி யின் தம்பி நாகபாபுவின் மகளும் நடிகையுமான நிஹாரிகா, குண்டூர் எம்.பி. கல்லா ஜெயதேவின் மகனும் நடிகருமான கல்லா சித்தார்த், பாடகரும் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3-ன் வெற்றியாளருமான ராகுல் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் 142 பேர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அரசியல், சினிமா பிரமுகர் களின் நெருக்குதலுக்கு பயப்படாத தெலங்கானா போலீஸார் இறுதியாக 148 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனால், தெலுங்கு திரையுலகம் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.