அரசியல் கட்சிகளுக்கு ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனமும் தேர்தல் நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடையாக வழங்குகின்றன. தேர்தலில் வெளிப்படைத் தன்மைக்காகப் போராடும் தொண்டு நிறுவனம் ஒன்று, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் எவ்வளவு நன்கொடை பெற்றிருக்கின்றன என்பது குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், 2019-20-ம் ஆண்டு பா.ஜ.க ரூ.720.407 கோடி நன்கொடை பெற்றுள்ளது. மொத்தம் 2,025 கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இவை கிடைத்துள்ளது. தேசிய கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுத்துள்ள நன்கொடையின் அளவு 2017-18-ம் ஆண்டை விட 2018-19-ம் ஆண்டில் 109 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பொதுவாக அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு அதிகமாக நன்கொடை பெற்றிருந்தால் யார் கொடுத்தது என்பது குறித்து தேர்தல் கமிஷனிடம் தகவல் கொடுத்திருக்கும்.
தேர்தல் கமிஷனரிடமிருந்து அந்தத் தகவல்களைப் பெற்று தொண்டு நிறுவனம் இந்த அறிக்கையை தயாரித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி 2019-20-ம் ஆண்டில் ரூ.133 கோடி அளவுக்கு 154 நிறுவனங்களிடமிருந்து நன்கொடையாக பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.57 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2019-20-ம் ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறவில்லை.
ப்ரூடண்ட் எலக்ரோல் டிரஸ்ட் 2019-20-ம் ஆண்டில் அதிக அளவில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிக பட்சமாக ரூ.247 கோடியை நன்கொடை கொடுத்திருக்கிறது. இதில் பா.ஜ.க மட்டும் ரூ.216 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. ஒரே ஆண்டில் மொத்தம் 38 முறை இந்த டிரஸ்ட் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியிருக்கிறது.
2018-19-ம் ஆண்டில் ரூ.881 கோடியும், 2014-15-ம் ஆண்டில் ரூ.573 கோடியும் அரசியல் கட்சிகள் நன்கொடையாகப் பெற்றுள்ளன. மேலும் 2012-13-ம் ஆண்டிலிருந்து 2019-20-ம் ஆண்டுக்கு இடையே அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுத்த நன்கொடையின் அளவு ஆயிரம் மடங்கு அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.