பெங்களூரு : உரம் பற்றாக்குறைக்கு தீர்வு காண, 7,000 கோடி ரூபாய் செலவில், உரம் தயாரிப்பு தொழிற்சாலை திறக்க, கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.இது தொடர்பாக, பெரிய, நடுத்தர தொழிற்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி கூறியதாவது:மத்திய அரசின் உதவியுடன், 7,000 கோடி ரூபாய் செலவில், தொழிற்சாலை துவங்கி உரம் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படும். மங்களூரு, தாவணகரே அல்லது பெலகாவியில், தொழிற்சாலை துவங்கப்படும்.
இதனால் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.மொத்தம் 5,000 பேருக்கு வேலை வழங்கும் நோக்கில், 64 கோடி ரூபாய் செலவில், ஏற்றுமதியை ஊக்கப்படுத்தும் தொழில் பூங்கா துவங்க, அரசு திட்டம் வகுத்துள்ளது.திட்டத்துக்கு 1,000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. நிலத்தை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளோம்.முதலீட்டாளர்களை ஈர்க்க, மாநில அரசு நவம்பர் 2 முதல் 4 வரை, பெங்களூரில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுகிறது.எம்.பி.ஏ., – எம்.டெக்., பட்டதாரிகளுக்கு, அரசு ஊக்கமளிக்கும். ‘ஸ்மார்ட் ஆப்’ களுக்கான முதல் நிகழ்ச்சி, கலபுரகி, பெங்களூரு, பெலகாவியில் நடத்தப்படும்.மங்களூரில் பல தொழிற்சாலைகள், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்க மறுப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சரோஜினி மஹிஷி அறிக்கைப்படி, உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்க வேண்டும். இது தொடர்பாக குற்றச்சாட்டை எதிர்க்கொண்டுள்ள தொழிற்சாலைகளிடம் விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement