சட்டவிரோத பணப் பரிமாற்றம்; TMB வங்கி முன்னாள் தலைவரின் ₹216.40 கோடி சொத்துக்கள் முடக்கம்!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் இயக்குநராக இருந்தவர் எம்.ஜி.எம்.மாறன் என்ற நேசமணி மாறன் முத்து. இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த 2014-ம் ஆண்டு, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் 46,000 பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறையிடம் புகார் அளித்தது.

எம்.ஜி.எம்.மாறன்

அந்தப் புகாரில், தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மற்றும் மும்பை ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வங்கியும் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இதில், டி.எம்.பி வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் இயக்குநருமான எம்.ஜி.எம்.மாறன் என்ற நேசமணி மாறன் முத்து உடந்தையாக இருந்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறை ரூ.608 கோடி அளவில் வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பங்குகளை ஒதுக்கீடு செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இரண்டு வங்கி மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, FEMA எனப்படும் வெளிநாட்டுப் பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து , ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கிக்கு ரூ.100 கோடியும், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்கு ரூ.17 கோடியும் அபராதம் விதித்தது.

டி.எம்.பி வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் இயக்குநரான எம்.ஜி.எம்.மாறன், சிங்கப்பூரில் பலகோடி ரூபாய் அளவுக்குப் பணத்தினை வங்கியில் வைத்துக்கொண்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பரிவர்த்தனை மேற்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டதால் அவருக்கு ரூ.35 கோடி அபராதம் விதித்தது அமலாக்கத் துறை. இந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், அடுத்த கட்டமாக சொத்துக்களை முடக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது.

இதனை அடுத்து அமலாக்கத் துறையின் தொடர் விசாரணையில், எம்.ஜி.எம்.மாறனின் ரூ.293.91 கோடி மதிப்புடைய சொத்துக்கள், கடந்த டிசம்பர் 28-ம் தேதி முடக்கப்பட்டது. இந்தச் சொத்துக்கள் சதர்ன் அக்ரிபுரேன் இண்டஸ்ட்ரீஸ் பி.லிட், ஆனந்த டிரான்ஸ்போர்ட் பி.லிட், எம்.ஜி.எம். எண்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகளாக உள்ளன.

சிங்கப்பூரில் இரண்டு நிறுவனங்களின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கில் முறைகேடாக பங்குகளை கடந்த 2005-2006 மற்றும் 2006- 2007 நிதியாண்டில் 5,29,86,250 எஸ்.ஜி.டி எனப்படும் சிங்கப்பூர் டாலராக முதலீடு செய்ததையும் அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்தனர்.

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் முதலீடு செய்யப்பட்ட இதன் இந்திய மதிப்பு ரூ.293.91 கோடி ஆகும். இது தவிர, எம்.ஜி.எம்.மாறனின் சென்னை மற்றும் தெலங்கானாவில் இயங்கிவரும் எஸ்.ஏ.ஐ.பி.எல் நிறுவனம் சார்பில் வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அமலாக்கத்துறை

கடந்த 21.12.2016-ல் எம்.ஜி.எம்.மாறன் தனது இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு `சைப்ரஸ்’ நாட்டின் குடிமகனாக மாற அந்நாட்டு பாஸ்போர்ட் எடுத்துள்ளார். இது குறித்தும், வெளிநாட்டு முதலீடுகள் குறித்தும் விளக்கமளிக்க பலமுறை அமலாக்கத் துறை சார்பில் அவருக்கு சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை.

இதனை அடுத்து, எம்.ஜி.எம்.மாறனின் சென்னை மற்றும் தெலங்கானாவில் இயங்கிவரும் எஸ்.ஏ.ஐ.பி.எல் நிறுவனத்தின் கட்டடம், அந்த நிறுவனத்தின் அசையாச் சொத்துகள் ரூ.216.40 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 31-ம் தேதி முடக்கினர்.

இதுவரை எம்.ஜி.எம்.மாறனின் ரூ.510.31 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.