ரூ.1,034 கோடி நில மோசடி: சஞ்சய் ராவத் மும்பை சொத்துகள் பறிமுதல்: அமலாக்கத்துறை நடவடிக்கை

மும்பை: மும்பையில் ரூ.1,034 கோடி மதிப்புள்ள நில மோசடி தொடர்பான புகாரில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான நிலம், வீடு உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை இன்று பறிமுதல் செய்துள்ளது.

மும்பை பிஎம்சி வங்கி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வங்கியில் இருந்து ரூ.95 கோடி கடன் பெற்றதாக கட்டுமான நிறுவன இயக்குனர்களில் ஒருவராக பிரவின் ராவத் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அவரின் வங்கி கணக்கில் இருந்து அவரது மனைவி மாதுரிக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் அனுப்பியதும், மேலும் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்துக்கு வட்டி இல்லா கடனாக ரூ.55 லட்சம் மாற்றப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. இதுமட்டுமின்றி சஞ்சய் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் முறைகேடாக நிலம் மற்றும் வீடு வாங்கிய புகாரில் மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் சஞ்சய் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்புடைய அலிபாக், மும்பையின் தாதர் புறநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மூத்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில் ‘‘மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி அரசை உருவாக்கியதில் எனது பங்கு காரணமாக மத்திய அரசு கோபம் கொண்டுள்ளது. அந்த அரசை கவிழ்க்க உதவுமாறு பாஜக தலைவர்கள் தூது விட்டனர்.

அவர்களது கோரிக்கைகளுக்கு அடிபணிய மறுத்ததால் அரசு ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்தி என் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரின் குடும்ப உறுப்பினர்களை மிரட்டுகின்றனர்.

அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் சுயமாக சம்பாதித்தவை. என்னிடமும், மனைவியிடமும் ஒரு ரூபாய் கருப்பு பணம் இருப்பது நிரூபிக்கப்பட்டால், எனது சொத்துக்கள் அனைத்தையும் பாஜகவுக்கு நன்கொடையாக வழங்க தயாராக உள்ளேன்.’’ எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.