நெல்லை-கன்னியாகுமரி மாவட்டங்களின் எல்லையில் உள்ள கிராமம், லெவிஞ்சிபுரம். அந்த கிராமத்தில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.வெளியூர்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் அந்த கல்லூரியில் தங்கியிருந்து படித்து வருகிறார்கள்.
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு, நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இடையே ஏற்கெனவே சில மாதங்களாகவே மோதல் இருந்துள்ளது. இரு தரப்பு மாணவர்களையும் ஆசிரியர்களும், கல்லூரி நிர்வாகத்தினரும் அழைத்துப் பேசியதால் அப்போது பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது.
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தனித்தனியாகப் பிரிந்து தங்களுக்குள் வன்மத்தை வளர்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு நெல்லை பகுதியைச் சேர்ந்த மாணவர்களை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கியதாகத் தெரிகிறது
அதற்குப் பழி தீர்க்கும் வகையில், மற்றொரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பு மாணவர்களும் கல்லூரிக்கு உள்ளேயே மாறி மாறித் தாக்கிக் கொண்டனர். ஆசிரியர்கள் முன்னிலையிலேயே இந்த மோதல் நடந்திருக்கிறது. மாணவர்களை ஆசிரியர்கள் தடுத்ததால் விபரீதம் நடக்காமல் முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் சில மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
தாக்குதலில் ஒரு மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சிலர் சிகிச்சை பெற்று வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.இந்த மோதல் தொடர்பாக மாணவர்களோ அல்லது கல்லூரி நிர்வாகமோ காவல்துறையில் புகார் அளிக்கவில்லை.
பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மோதிக்கொண்டது தொடர்பான வீடியோ நெல்லை,. குமரி மாவட்டங்களில் வைரலாக பரவி வருகிறது. அதைப் பார்த்த பழவூர் காவல்துறையினர் கல்லூரி நிர்வாகத்தினரையும் மாணவர்களையும் அழைத்து மோதல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.