ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் சந்தித்துக் கொண்டால்.. விஜய்யும்,அஜீத்தும் சந்தித்துக் கொண்டால்.. என்ற வரிசையில் இப்போது அமித் ஷாவும், ப.சிதம்பரமும் சந்தித்துக் கொண்டால் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம் போல.
இரு தலைவர்களும் கீரியும் பாம்பும் போல.. இருவரும் எதிரெதிர் முனையில் இருப்பவர்கள். எதிரெதிர் துருவங்களாக விளங்குபவர்கள். அரசியலில் இருவரும் இரு முனையில் உள்ளனர். இப்படிப்பட்ட தலைவர்கள் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டால் எப்படி இருக்கும். அப்படி ஒரு காட்சியை நாடாளுமன்றத்தில் காண நேரிட்டது.
நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக உள்துறை அமைச்சர்
அமித் ஷா
வந்தார். அவர் வந்த சமயத்தில் நுழைவாயிலின் மேல் படிக்கட்டில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நின்றிஇருந்தார். அவரைப் பார்த்த அமித் ஷா, மரியாதை நிமித்தமாக ப.சிதம்பரத்திற்கு புன்னகையுடன் வணக்கம் வைத்தார். பதிலுக்கு ப.சிதம்பரமும் புன்னகை பூத்தபடி பதில் வணக்கம் வைத்தார்.
இருவரும் இப்படி நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட அந்தக் காட்சியை ஊடக வீடியோ கிராபர்கள், புகைப்படக் கலைஞர்கள் சரமாரியாக சுட்டுத் தள்ளினர் தங்களது கேமராக்களில்.
இவர்களுக்கு இடையே ஒரு பிளாஷ்பேக் உள்ளது. அப்போது மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியில் இருந்தது. ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தார். அமித் ஷா, குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தார். குஜராத் முதல்வராக இருந்தவர் நரேந்திர மோடி. அப்போது சோராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் அமித் ஷா சிக்கியிருந்தார். அவரை சிபிஐ கைது செய்தது. மேலும் அமித் ஷாவுக்கு ஜாமீன் கொடுப்பதற்கும் சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும் அவருக்கு ஜாமீன் கொடுத்த உச்சநீதிமன்றம், குஜராத் மாநிலத்திற்குள் அமித் ஷா நுழைய தடை விதித்து உத்தரவிட்டது.
இன்னொரு பிளாஷ்பேக்.. வருடம் 2019.. மத்திய உள்துறை அமைச்சராக இருப்பவர் அமித் ஷா. பதவியேற்று ஒரு மாதம்தான் ஆகியுள்ளது. ப.சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்கிறது சிபிஐ. அவரது வீட்டை சுற்றி முற்றுகையிட்ட சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்து உள்ளே புகுந்து அதிரடியாக ப.சிதம்பரத்தைக் கைது செய்து கொண்டு வருகின்றனர். டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்படுகிறார் ப.சிதம்பரம். மிகுந்த போராட்டத்து்குப் பின்னர் அவருக்கு ஜாமீன் கிடைத்து பின்னர் விடுதலையாகி வெளியே வந்தார்.
இரு தலைவர்களும் இன்று நாடாளுமன்ற வாசலில் சந்தித்துக் கொண்டபோது இந்த இரு சம்பவங்களும் அவர்களுக்குள் வந்து போயிருக்கலாம் .. ஆனால் இந்தப் புகைப்படத்தைப் பார்த்த மக்கள் விதம் விதமாக கமெண்ட் போட்டு வருகின்றனர். பலர் மீம்ஸ்களிலும் குதித்துள்ளனர். கீரியும் பாம்பும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோது என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
அடுத்த செய்திஏப்ரல் 7 வரை ஊரடங்கு – மாநில அரசு திடீர் உத்தரவு!