நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள நஞ்சநாடு, அம்மனட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் மனைவி ஜெயலட்சுமி(57). இவர்களுக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டம் நரிக்குழி எனும் பகுதியில் உள்ளது. இவர்கள் இருவரும் தேயிலைத் தோட்டத்தில் பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். மோட்டாரை இயக்க வைத்திருக்கும் டீசலை எடுத்துவருமாறு கணவர் நடராஜன், ஜெயலட்சுமியிடம் கூறியுள்ளார். டீசலை எடுத்துவருவதற்காகச் சென்ற ஜெயலட்சுமி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார். போன் அழைப்பை ஏற்காததால் குழப்பமடைந்த நடராஜன் மனைவியைத் தேடிச் சென்றிருக்கிறார்.
அப்போது, தேயிலைச் செடிகளுக்கு நடுவே ஜெயலட்சுமி படுகாயத்துடன் குடல் சரிந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் துடித்திருக்கிறார். காட்டுமாடு தாக்கியதாலேயே ஜெயலட்சுமி படுகாயம் அடைந்திருக்கிறார் என்பதைக் கண்டு பதறிய நடராஜன் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறார்.
ஜெயலட்சுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிர் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதையடுத்து அவர் உடலை கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெயலட்சுமியின் குடும்பத்திற்கு முதற்கட்ட நிவாரணமாக ரூ.50 ஆயிரத்தை வழங்கி ஆறுதல் தெரிவித்தார் நீலகிரி கோட்ட மாவட்ட வன அலுவலர்.
இந்த சோக சம்பவம் குறித்துப் பேசிய அம்மனட்டி பகுதி மக்கள், “இந்தப் பகுதியில் காட்டுமாடு நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு இதே போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. பெரும்பாலான காட்டுமாடுகள் தேயிலைத் தோட்டத்திலேயே உலவி வருகின்றன. புதர் மறைவில் மறைந்திருந்த காட்டுமாடு தாக்கியதில் இந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். எதிர்கொள்ளல்களை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை வேண்டும்” என்றனர்.