என் மகள் குற்றவாளி அல்ல : நிஹாரிகா தந்தை விளக்கம்
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் நிஹாரிகா. தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' என்ற படத்தில் நடித்திருந்தார். ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 'விங் பப் பார்ட்டி' என்ற பெயரில் போதை பார்ட்டி நடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் அந்த ஓட்டலுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகை நிகாரிகா, பாடகர் ராகுல் சிப்ளி கஞ்ச் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் பிரபல தொழில் அதிபர்களின் மகன், மற்றும் மகள்கள் உள்பட 150 பேர் சிக்கி உள்ளர்.
இதை தொடர்ந்து நடிகை நிஹாரிகா பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார். பின்னர் அவர் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். தெலுங்கு சினிமாவில் மதிப்பு மிக்க பெரிய குடும்பத்து பெண் போதை வழக்கில் சிக்கியது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து நிஹாரிகாவின் தந்தை நாகபாபு விளக்கம் அளித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நட்சத்திர ஓட்டலில் போலீசார் சோதனை நடத்தியபோது எனது மகள் அங்கு இருந்தது உண்மைதான். விதிமுறைகளை மீறி ஓட்டல் நிர்வாகம் அதிகாலை வரை பப் நடத்தியதால் இந்த சோதனை நடந்துள்ளது. அந்த நேரத்தில் என் மகள் அங்கிருந்தாரே தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை. இதை போலீசாரே தெரிவித்து விட்டனர். இந்த விஷயத்தில் என் மகளை போலீசார் சாட்சியாக மட்டுமே சேர்த்துள்ளனர், அவர் மீது குற்றச்சாட்டு எதுவும் இல்லை. தயவு செய்து என் மகள் குறித்து தவறான செய்திகளை பரப்பாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.