நாளை முதல் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தவும், துறைகளுக்கு நிதி ஒதுக்கியதற்கு ஒப்புதல் பெறுவதற்காகவும் சட்டசபை கூடுகிறது. இந்த சட்டசபைக் கூட்டம் மே 10-ம் தேதி வரை நடக்கும். இந்த சட்டசபைக் கூட்டத்தில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தொடங்கி ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடக்கும்.
இந்த நிலையில் தற்போது நீட் விலக்கு, சொத்துவரி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்னை, இன்னும் தி.மு.க நிறைவேற்ற வேண்டிய தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பல பிரச்னைகளை விவாத களத்துக்குக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஒவ்வொரு துறை மானிய கோரிக்கை விவாதம் நிறைவடைந்ததும், அந்த துறை அமைச்சர் புதிய அறிவிப்புகளை அறிவிப்பார். அந்த வகையில், சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.