உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய போரானது கிட்டத்தட்ட 5 வாரங்களுக்கு மேலாக இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் இதுவரையில் சுமார் 4 மில்லியன் உக்ரேனியர்கள் இந்தப் போரால் சொந்த நாட்டைவிட்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுள்ளதாகவும், 1,000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் சமீபத்தில் ஐ.நா கூறியிருந்தது.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை உக்ரைனின் புச்சா, கீவ் நகரங்களிலிருந்து ரஷ்ய ராணுவம் வெளியேறியது. அதன் பின்னர் உக்ரைன் பொதுமக்கள் புச்சா, கீவ் நகர்களில் நுழைந்தபோது, அங்கு பலர் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் சிதறிக் கிடந்துள்ளன. ராணுவம் வெளியேறியபோது நடைபெற்ற தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தலையில் குண்டடிபட்டு இறந்த உடலுக்கு அருகில், நாய் ஒன்று அந்த உடலைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கிறது. நீண்ட நேரமாகியும் அந்த நாய் அந்த உடலை விட்டுப் பிரிய மனமில்லாமல் அங்கேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், யாரையும் அந்த உடலுக்கு அருகில் விடாமல் அந்த நாய் விரட்டியடித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் மக்கள் கூறுகையில், அந்த நாய் போரில் இறந்த தன் உரிமையாளர் மீது கொண்ட அன்பின் காரணமாக அவர் உடலைப் பிரிய மறுத்து ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருந்ததாகத் தெரிவித்தனர்.
இது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.