திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி பகுதியில் காமாட்சி என்ற மூதாட்டிக்கு இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் இருக்கின்றனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில் காமாட்சி தனது இளைய மகன் ஆறுமுகம் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு கோவிலுக்கு செல்லலாம் என்று தாயை ஆறுமுகம் அழைத்துச் சென்றுள்ளார். இதை நம்பி காமாட்சியும் அவருடன் சென்ற நிலையில், ஒரு பையில் அந்த மூதாட்டியின் உடைகளை போட்டு எடுத்துக்கொண்டு பேருந்தில் சென்று கிருஷ்ணகிரி புது பஸ் ஸ்டாண்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது அந்த மூதாட்டியை அங்கேயே உட்கார வைத்துவிட்டு ஆறுமுகம் அங்கிருந்து ஓடிவிட்டார். மகன் எப்பொழுது வருவான் என்று நீண்ட நேரம் காமாட்சியை காத்திருந்த நிலையில், அவர் வெகுநேரமாகியும் வராத காரணத்தால் காமாட்சி கதறி அழுதுள்ளார்.
இது அங்கிருந்த மக்களை கண்கலங்க வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு உணவு வழங்கி பொதுமக்கள் ஆறுதல் கூறி அங்கு இருக்கும் அரசு காப்பகம் ஒன்றில் சேர்த்துள்ளனர். கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி தாயை அழைத்து வந்து நடுரோட்டில் விட்டு சென்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.