தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியுடன் கூட்டணி இல்லை: மூத்த தலைவர்களிடம் ராகுல் உறுதி

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் உள்ள தமது இல்லத்தில் தெலங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில் தெலங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உட்பட தெலங்கானா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் என 30 பேர் கலந்து கொண்டனர். அப்போது  தெலங்கானாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியுடன் எந்தக் கூட்டணியும் இல்லை என்று ராகுல் காந்தி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரேவந்த் ரெட்டி கூறுகையில், ‘விவசாயிகள், பணவீக்கம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் நெல் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ராகுல் காந்தியுடன் விவாதித்தோம். இந்த மாதம் தெலங்கானா மாநிலத்திற்கு ராகுல்காந்தி வரவுள்ளார். மாநிலத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராடும் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டார்’ என்றார். இதற்கிடையே வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவரும் தெலங்கானா மாநில முதலமைச்சருமான கே.சந்திரசேகர ராவ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால், தற்போது சந்திரசேகர ராவ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று ராகுல்காந்தி கூறியிருப்பது எதிர்க்கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.