சென்னையில் 2000 அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இதுகுறித்து தெரிவிக்கையில்,
“சென்னையில் இரண்டாயிரம் அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் முகங்களை அறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
குறிப்பாக பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக விரைவில் இந்த புதிய செயல்திட்டம் வரவுள்ளது. இதற்காக பேரூந்துகளில் ‘பேனிக் பட்டன்’ பொருத்தப்படும்.
பெண்களுக்கு பிரச்னை ஏற்படும் பட்சத்தில் இந்த ‘பேனிக்’ பட்டனை அழுத்தினால், கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம். இதற்காக தனிக்கட்டுப்பாட்டு அறை அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகான வரும் சட்டமன்ற கூட்டத்திற்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்படும். தற்போதைக்கு தமிழகத்தில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்த எந்த வாய்ப்பும் இல்லை” என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.