புதுடெல்லி: இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதாக கூறி மேலும் 22 யூடியூப் சேனல்களை ஒன்றிய அரசு முடக்கி உள்ளது. இந்திய இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படும் யூடியூப் சேனல்கள், இணைய தளங்களை ஒன்றிய அரசு முடக்கி வருகிறது. உளவுத்துறையின் பரிந்துரை அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது, மேலும் 22 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டு உள்ளதாக ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட புதிய ஐடி விதிகளின் கீழ், முதல் முறையாக இந்த சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. இதில், 18 யூடியூப் சேனல்கள் இந்தியாவில் இருந்தும், 4 சேனல்கள் பாகிஸ்தானில் இருந்தும் செயல்பட்டு வந்துள்ளன. இதுதவிர 3 டிவிட்டர் கணக்குகள், ஒரு பேஸ்புக் கணக்கு மற்றும் ஒரு இணையதளமும் முடக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கடந்தாண்டு டிசம்பரில் 20 யூடியூப் சேனல்களும், ஜனவரியில் 35 யூயூயூப் சேனல்களும் முடக்கப்பட்டன குறிப்பிடத்தக்கது.