கருணாநிதி பிறந்தநாளன்று சிறந்த இதழியலாளருக்கு ரூ.5 லட்சம் பரிசுடன் “கலைஞர் எழுதுகோல் விருது”! தமிழகஅரசு

சென்னை: கலைஞர் பிறந்த நாளான ஜுன் 3ந்தேதி அன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” ரூ.5 லட்சம் பரிசு பணத்துடன் வழங்கி கவுரவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

திமுக பதவி ஏற்றதும் கடந்த 2021ம் ஆண்டு மானிய கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் சாமிநாதன், கலைஞர் எழுதுகோல் விருது, சமூக ஊடகப்பிரிவு, பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்டங்கள் என பல திட்டங்களை அறிவித்தார். அதன்படி இந்த ஆண்டு கலைஞர் எழுதுகோல் விருது, கலைஞர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ந்தேதி சிறந்த இதழியாளருக்க வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜுன் 3ஆம் நாளன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கெளரவிக்கப்படும். அவ்வகையில், 2021 ஆம் ஆண்டுக்கான இவ்விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   இவ்விருதில் ரூபாய் ஐந்து இலட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழும் அடங்கும்.

கலைஞர் எழுதுகோல் விருதிற்கான தகுதிகள்:-

விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிகிறவராகவும் இருக்க வேண்டும்.

பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டிருக்க வேண்டும்.

இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பங்காற்றியிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ, பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின்பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.

இதற்கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

மேற்காணும் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பங்கள், விரிவான தன் விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 என்ற முகவரிக்கு 30.4.2022-க்குள்ளாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.