புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சி கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மாநிலங்களவை, மக்களவை எம்பிக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது: சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கட்சியின் செயல்திறன் அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருந்ததால் நீங்கள் எவ்வளவு ஏமாற்றம் அடைந்து இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். கட்சியின் காரிய கமிட்டி இது குறித்து மறுபரிசீலனை செய்துள்ளது. கட்சியை வலுப்படுத்துவது குறித்த ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளது. அவற்றில் பல ஏற்றுக் கொள்ளக் கூடியவை. அதன்படி, பணிகள் கட்சி செயல்பட்டு வருகின்றது. கட்சி முன்னோக்கி வழி நடத்தி செல்வதற்கான பாதை முன்பு எப்போதும் இருந்ததை காட்டிலும் தற்போது மிகவும் சவாலாக இருக்கிறது. நமது அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு, மன உறுதி ஆகியவை கடுமையான சோதனையில் உள்ளன. நமது பரந்த அமைப்பின் அனைத்து மட்டங்களிலும் ஒற்றுமை என்பது மிகவும் முக்கியமானது. கட்சியின் மறுமலர்ச்சி என்பது நமக்கு மட்டும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. உண்மையில் ஜனநாயகத்துக்கும், சமூகத்திற்கும் அவசியமானது. குறு, சிறு விவசாயிகள் ஆபத்தான நிலையில் இருப்பது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. விவசாயிகளுக்கு ஒன்றிய அரசால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. சமையல் எரிவாயு சிலிண்டர், எண்ணெய், பெட்ரோல், டீசல், உரங்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பொதுமக்களால் தாங்க முடியாத அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதற்கு ‘பணவீக்கம் இல்லாத இந்தியா’ பிரசாரம் நீடிக்க வேண்டும். ஆளும் கட்சிகள், அதன் தலைவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நிகழ்ச்சி இப்போது மாநிலத்திற்கு மாநிலம் அரசியல் சொற்பொழிவின் அங்கமாக மாறிவிட்டது. வெறுப்பு மற்றும் தவறான எண்ணத்தின் சக்திகளை நாம் எழுச்சியுடன் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.