புதுடெல்லி: அரசியல் கட்சிகள் மறைமுகமாக ரொக்க நன்கொடைகளை பெறுவதை தடுத்து, வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் நோக்கத்தில் தேர்தல் பத்திர திட்டத்தை கடந்த 2018ம் ஆண்டு ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தியது. ரிசர்வ் வங்கி வெளியிடும் தேர்தல் பத்திரங்களை வாங்கி, அரசியல் கட்சிகளுக்கு யார் வேண்டுமானாலும் நன்கொடையாக வழங்கலாம். இதுவரை ரூ.6,500 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகி உள்ளன. இதில் பெரும்பாலான நன்கொடை ஆளும் கட்சிகளுக்கே சென்றுள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க கோரி, தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் கடந்த ஜனவரியில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளிக்கும் சட்டத்தை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் சார்பில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘வழக்கு முக்கியமானது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்,’ என்று வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்ற நீதிபதிகள், இந்த பொதுநலன் வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுமாறு பதிவாளருக்கு நேற்று உத்தரவிட்டனர்.