புதுடெல்லி: கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை தமிழில் ஒளிபரப்ப, ஒன்றிய அரசு முன்மொழிந்த சேனல்களின் எண்ணிக்கை எத்தனை? என திமுக எம்பி தயாநிதி மாறன் மக்களவையில் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அறிவிப்பின் போது கல்விக்கு என புதிதாக 200 சேனல்கள் தொடங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், மாநில கல்வித் தொலைக்காட்சிகளை மேம்படுத்த ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்வி விவரங்கள் வருமாறு:* மாநிலங்களுக்கான புதிய கல்வி சேனல்களை தொடங்கிட ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?* கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை தமிழில் வழங்கிட ஒன்றிய அரசு முன்மொழிந்த சேனல்களின் எண்ணிக்கை எவ்வளவு?* மாநில தொலைக்காட்சிகளில் புதிய சேனல்களை உருவாக்கிடும் பொருட்டு பணியாளர்களை அதிகரிக்க ஆட்சேர்க்கை நிகழ்ந்துள்ளதா?* கல்வி தொலைக்காட்சிகளில் மாற்று மொழி விருப்பங்கள் மற்றும் உரையாடும் விருப்பம் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் மூலம் ஒளிபரப்பு உட்கட்டமைப்புகளை வலுப்படுத்த ஒன்றிய அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா?* மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சைகை மூலம் ஒளிபரப்பும் திட்டம் ஏதேனும் ஒன்றிய அரசிடம் உள்ளதா? இவை குறித்த விவரங்களை தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.